Thursday 19 July 2012

"பாலா, அமீர், சசி... இந்திக்கு வந்தால் மிரட்டுவார்கள்! அனுராக் காஷ்யப்


கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்... ரத்தம், வன்முறை, ஆபாச வசனங்கள், நம்பிக்கைத் துரோகம்... இந்தியில் ஒரு யதார்த்த சினிமா. பீகார் - ஜார்கண்ட் மாநிலங்களின் நிலவிய லையும் அங்கு வாழும் இரு பிரிவினரின் தலைமுறை தாண்டிய கோபத்தையும் சுரங் கத் தொழிலாளர்களின் வாழ்வியல் பின்னணி யோடு ரொம்பவே காரமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் அனுராக் காஷ்யப். 'தேவ் டி’, 'குலால்’ படங்களை மறைத்து 'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ அனுராக் காஷ்யப் மீது புது நம்பிக்கை விதைத்திருக்கிறது.
ஜார்கண்ட் மாநில தன்பாத் மாவட்டத்தில் இருக்கும் சிறு நகரம் வாஸிப்பூர். இங்கு இஸ்லாமியர்களுள் இரு பிரிவினரான குரேசிகளுக்கும் கான்களுக்கும் இடையிலான பிரச்னை மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது படம். காலையில் சைக்கிளில் வந்து வீட்டு வாசலில், 'அம்மா பால்’ என்று கூவிக் குண்டு வீசுவது, ரயிலையே மடக்கிக் கொள்ளையடிப்பது, எதிரிகளை ஈவு இரக்கம் இல்லாமல் கூறுபோட்டு மாட்டுக் கறியோடு கறியாகக் கசாப்பு ஆக்குவது, சல்லிசு விலையில் கிடைக்கும் நாட்டுத் துப்பாக்கிகள், ஊரை மிரட்டும் தாதா... வீட்டில் மனைவியிடம் விளக்குமாறால் அடிவாங்குவது, கணவன்-மனைவிக்கு இடையிலான ஆபாச அந்தரங்கம் என அப்படியே அச்சு அசல் இந்திய பின்தங்கிய மாநில நிலவரத்தைப் படம் பிடித்திருக்கிறார் அனுராக். ('கண்டிப்பாகக் குழந்தைகளை அழைத்து வராதீர்கள்!’ என்பது அனுராக் காஷ்யபின் வேண்டுகோள்!)
 மொத்தம் ஐந்து மணி நேரம் ஓடும் படத்தில் சரிபாதியை மட்டும் முதல் பாகமாக வெளியிட்டு இருக்கிறார் அனுராக். இரண்டாவது பாகம் ஆகஸ்ட்டில் ரிலீஸ். படத்துக்குப் பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ்; படத் துவக்கத்தில் நன்றி அறிவிப்புப் பட்டியலில்... 'மதுரை நண்பர்கள் பாலா, அமீர், சசிகுமார் மூவருக்கும் நன்றி!’ என்ற வரிகள் எனத் தமிழர்களுக்கு இன்னும் நெருக்கமான படம் இது. ஜெர்மனி யில் மனைவியோடு ஓய்வில் இருந்த அனுராக் காஷ்யபைப் பிடித்தேன். 'சென்னை அழைப்பு’ என்றதும் உற்சாகமாகிவிட்டார் காஷ்யப்!
''சென்னை எப்பவும் என் மனசுக்கு நெருக்கமான ஊர். மண்ணும் அதன் மக்களின் வாழ்க்கையும் அதிகம் பதிவாவது தமிழில்தான். பாலாவின் 'நான் கடவுள்’, அமீரின் 'பருத்தி வீரன்’, சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம்’... இந்த மூன்று படங்களும் என் தூக்கத்தைக் கலைத் தவை. பீகாரின் வாஸிப்பூர் - தான்பாத் பகுதி களில் ஒருகாலத்தில் மாஃபியாக்கள் ஆதிக் கம் அதிகம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், என்னிடம் இந்தக் கதையை முதலில் செய்யது காத்ரி சொன்னபோது நான் நம்பவில்லை. 'சிட்டி ஆஃப் காட்’ கதையை உல்டா பண்ணிச் சொல்கிறாரோ என்று தவறாக நினைத்து, 'பார்க்கலாம்’ என்று அனுப்பிவைத்தேன். செய்யது காத்ரிக்கு என் மீது கோபம் வந்திருக்க வேண்டும். உடனே, தன் ஊரான வாஸிப்பூருக்குத் திரும்பி, பல ஆண்டுகள் தான் சேகரித்துவைத்திருந்த பேப்பர் கட்டிங்குகளைக் கொண்டுவந்து என்னிடம் காட்டினார். அவர் சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்தேன். அந்தப் பகுதிகளில் என் அடையாளத்தை மறைத்து மாதக் கணக்கில் சுற்றி அங்கு இருக்கும் இன்னோர் உலகத்தை உணர்ந்துகொண்டேன். உடனே, காத்ரியை வரவழைத்து ஸ்க்ரிப்ட்டைத் தயாரிக்கத் தொடங்கினேன். எதையும் நீக்க முடியாத அளவுக்கு ஐந்து மணி நேரப் படத்துக்கான ஸ்க்ரிப்ட் அமைந்தது. அதனால், படத்தை இரண்டு பாகங்களாக்கிவிட்டோம்.''  
''இருந்தாலும் இவ்வளவு ரத்தமும் கெட்ட வார்த்தைகளும் தேவையா?''
''விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். என் படங்கள் உலக சினிமாக்களின் தழுவல்கள் என்றுகூடத்தான் விமர்சிக்கிறார்கள். நான் நிஜத்தைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். டாக்குமென்டரிக்கும் வெகுஜன சினிமாவுக்கும் உள்ள நுட்பமான இடைவெளியை என் படங்கள் நிரப்புவதால் அவை இவ்வாறு விமர்சிக்கப்படுகின்றன. வன்முறையையோ கெட்ட வார்த்தைகளையோ நான் வலிந்து திணிப்பது இல்லை. என் படத்தின் ரசிகர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பவர்கள்தான். அந்தப் பொறுப்பு உணர்வோடு படங்களைத் தருவதில்தான் எனக்கும் உடன்பாடு. ஆனால், அதற்காக உண்மையை மழுங்கச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.''
''தமிழ்ப் படங்கள் இயக்கும் எண்ணம் உண்டா?''
''மணிரத்னம் சாருடன் 'யுவா’ (ஆய்த எழுத்து) படத்திலும் ராம்கோபால் வர்மாவுடன் 'சத்யா’ உள்ளிட்ட பல படங்களிலும் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் வேலை பார்த்திருக்கிறேன். இருவரின் 'ஸ்கூல் ஆஃப் ஃபிலிம் மேக்கிங்’ என்னை சினிமாவின்பால் அதிகம் ஈர்த்தது. தமிழின் அனைத்து முக்கிய இயக்குநர்களின் படங்களையும் பார்த்துவிடுவேன். இப்போது பாலா, அமீர், சசிகுமார் ஆகிய மூவரும் தமிழில் பார்க்க வேண்டிய படங்களை எனக்குப் பரிந்துரைப்பார்கள். நான் தமிழ்ப் படங்கள் இயக்குவது இருக்கட்டும்... அவர்கள் இந்திக்கு வந்தால் மிரட்டி எடுப்பார்கள். பார்க்கலாம்... எதிர்காலத்தில் நான் அங்கு வருவதும் அவர்கள் இங்கு வருவதும்கூடச் சாத்தியம்தான்!''

No comments:

Post a Comment