Wednesday 29 August 2012

3 பேர் அடங்கியாச்சு.. இன்னும் ஒருத்தர் அடங்கவில்லை!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களுக்கு என்று தனியாக இணையதளம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள். பிரபுசாலமன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'சாட்டை' படத்தின் இசை வெளியீட்டு விழாவும், இணையதள தொடக்க விழாவும் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, எஸ்.பி.ஜனநாதன், அமீர், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், மாதேஷ், ஜெயம் ராஜா, சீனு ராமசாமி, கௌதமன், ஜீவன், சந்தானபாரதி, ஹோசிமின் உள்ளிட்ட இயக்குநர் சங்க பொறுப்பாளர்கள், பிரபலங்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அப்போது அமீர் பேசும்போது " ஒரு வருடத்திற்கு முன் நான், பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டவர்கள் பொறுப்பிற்கு வந்தபோது, சங்கத்தில் இருந்தவர்களே "படம் எடுக்கறதை விட்டுவிட்டு சங்கம் அது இதுவென்று இவர்களால் தாக்கு முடியுமா? " எனக்கேட்டு போராட்டம் தர்ணா என்று எங்களுக்கு எதிராக எவ்வளவோ செய்தனர்.

அதில் மூன்று பேர் இன்று அடங்கியாயிற்று... இன்னும் ஒருவர் அடங்கியபாடில்லை... நான் 'ஆதிபகவன்' ஷூட்டிங்கில் இருந்தபோது உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறினார். நான் கூட 'வாழ்த்துக்கள்' என மெ‌ஸேஜ் அனுப்பினேன். அதை கூட அவர் மீடியாக்களிடம் பப்ளிசிட்டி பண்ணி பார்த்தார்.

அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் இதோ சங்கத்திற்கு சொந்தமாக இடம், கட்டடம் கட்டியாயிற்று, அடுத்து இன்று புதிதாக www.tantis.org எனும் இணையதளமும் தொடங்கியாச்சு. அதில் இந்த 'சாட்டை' ஆடியோ விழா உள்ளிட்ட சினிமா விழாக்களை லைவ்வாக ஒளிப்பரப்பும் வெப் டி.வி.யும் ஆரம்பித்தாயிற்று. இதற்கு அடுத்து ஒரு டி.வி.சேனல் ஆரம்பிக்க இருக்கிறோம். எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் எல்லாமும் முடியும் என்பதே என் எண்ணம்!

இயக்குனர் சங்கத் தேர்தலில் அடுத்து நான் நிற்கப்போவதில்லை... ஆனாலும் சங்கம் சிறப்பாக செயல்பட 24-மணி நேரமும் தன்னை அர்பணித்து கொண்டிருக்கும் எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டவர்களை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்தியாவிலேயே இயக்குனர் சங்கத்திற்கு என்று ஒரு வெப்சைட் இருப்பது இதுதான் முதல்முறை. அதுவே நமது சாதனை! சாதனைகள் தொடர, எதை எடுத்தாலும் குறை கூறுபவர்கள் அடங்கினாலே போதும் " என்று கூறினார்.

No comments:

Post a Comment