Tuesday 14 August 2012

காதல்ல தோத்தாலும் வரலாறு தான்! அட்டக்கத்தி நாயகன் தினேஷ்



மேனரிஸம், மொழி ஆளுமை என பார்ப்பதற்கு அச்சு அசல் சென்னைப் பையன் போலவே இருக்கிறார் 'அட்டகத்தி' நாயகன் தினேஷ்.

"நான் பிறந்தது மட்டும்தான் வேலூர். மத்தபடி வளர்ந்தது எல்லாம் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டையிலதான். இப்ப நான் குடியிருக்குறது செவ்வாய்ப்பேட்டை. இப்ப சொல்லுங்க, நான் அக்மார்க் சென்னைப் பையன்தானே?" வயதுக்கே உரிய குறும்பு தெரிகிறது தினேஷிடம்.
ஏற்கெனவே 'ஈ', 'ஆடுகளம்', 'மௌனகுரு' படங்களில் சின்னச்சின்ன வேடங்கள் ஏற்றவருக்கு, தன்னுடைய மொத்தத் திறமையையும் வெளிக்காட்டும் விதமாக இந்தப் படத்தில் ஹீரோவாக கலக்கி இருக்கிறார்.

செவ்வாய்ப்பேட்டை டு கோடம்பாக்கப் பயணம் நிகழ்ந்தது எப்படி?
"சின்ன வயசுல இருந்தே நடிக்கணும்னு ஆசை. ப்ளஸ்-டூ முடிச்சதும் காலேஜ்ல சேராம ஒவ்வொரு இயக்குநரா போய் பாத்து வாய்ப்பு தேடி அலைஞ்சிகிட்டு இருந்தேன். அப்பதான் ஒருநாள் இயக்குநர் பாலுமகேந்திரா சார்கிட்ட கோ-டைரக்டரா வேலை பார்த்துக்கிட்டு இருந்த வெற்றிமாறன் சாரைப் பார்த்தேன். ஒரு சீனைச் சொல்லி நடிச்சிக்காட்டச் சொன்னார். ஆனா, அது எனக்கு சரியா வரலை. அவர்தான் தியேட்டர் பத்தி சொல்லி, நடிக்கக் கத்துக்கணும்னா தியேட்டர்தான் சரியான சாய்ஸ்னு அனுப்பி வெச்சார். இது நடந்தது 2003. அதுக்குப்பிறகு நிறைய தியேட்டர்ல சேர்ந்து நடிக்கக் கத்துக்கிட்டேன். இதுவரைக்கும் 8 நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். இடையில 'ஈ', 'ஆடுகளம்', 'மௌனகுரு' படங்கள்ல சின்னச்சின்ன வேடங்கள் பண்ணேன். 'அட்டகத்தி'க்கு ஆடிஷன் நடக்குறதா கேள்விப்பட்டு கலந்துக்கிட்டேன். இறுதியா 6 பேர் தேர்வானாங்க. அந்த 6 பேருக்கும் வெச்ச போட்டியில நான் தேர்வானேன்.


'அட்டகத்தி' பத்தி சொல்லுங்க..
"நான் செலக்ட் ஆனதும் 'எவ்வளவு மொக்கை வாங்குனாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்'னு படத்தோட ஒன்லைன் மட்டும்தான் சொன்னாங்க. ஷூட்டிங் போகப்போகத்தான் இது அவ்வளவு அருமையான படம்னு புரிஞ்சுது. இப்ப வர்ற பெரும்பாலான படங்கள் நம்மை அழவைக்குற மாதிரிதான் இருக்குது. ஆனா, எல்லாத் தரப்பு மக்களையும் சிரிக்க வைக்குற படமா 'அட்டகத்தி' இருக்கும். எல்லோருக்குள்ளும் ஒரு ஹீரோ கண்டிப்பா இருப்பான். அதேமாதிரி எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனமும் ஒளிந்திருக்கும். அதை வெளிக்காட்டுகிற படமா இது இருக்கும்."

'ஷூட்டிங் ஸ்பாட்' எப்படி இருந்தது?
எங்க டைரக்டர் ரொம்ப ஜாலியானவர். அதனால யூனிட்டே எப்பவும் கலகலன்னுதான் இருக்கும். எப்பவுமே எனர்ஜியோட இருப்பார். ஷூட்டிங் ஆரம்பிச்ச மூணாவது நாள், ஒரு சீன் மட்டும் முடிக்க முடியாம 19 டேக் வரைக்கும் போயிடுச்சி. எல்லாருமே சோர்ந்து போயிட்டோம். ஆனா, டைரக்டர் மட்டும் ஒண்ணாவது டேக் எடுக்கும்போது என்ன வேகத்தோட இருந்தாரோ, அதேவேகத்தோடத்தான் 19 டேக்லயும் இருந்தார். அவரைப் பார்த்துதான் நாங்க எல்லாம் சுறுசுறுப்பா இயங்குனோம்... இயங்கிகிட்டு இருக்கோம்.

படத்துல 5 ஹீரோயின்ஸாமே... அப்படியா?உண்மைதாங்க. ஒரு ஹீரோயின்கிட்ட லவ் ப்ரப்போஸ் பண்ணி மொக்கை வாங்குறது, அதப்பத்திக் கொஞ்சம்கூட கவலைப்படாம அடுத்த ஹீரோயினை ட்ரை பண்றதுன்னு என் கேரக்டர் செம ஜாலி! படத்தோட கடைசிவரைக்கும் முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பேன். 'காதல்ல தோத்தாலும் வரலாறு' இதுதான் படத்தோட பஞ்ச்!

ஹீரோயின்ஸ்ல உங்களுக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?கிசுகிசு எழுதறதுக்கு கேட்குறீங்கனு நினைக்குறேன். ஏன் இந்த ஓரவஞ்சனை? 5 பேரையுமே பிடிக்கும்னு போட்டுக்கோங்க. 'நடிகையுடன் பார்ட்டிக்குப் போனார்'ன்னு இப்பவே கிசுகிசு ரெக்கை கட்டிப் பறந்துகிட்டு இருக்கு. நான் இதுவரைக்கும் தனியாகூட பார்ட்டிக்குப் போனது கிடையாது. ஹீரோயின்ஸ்ல ஒருத்தர் செல்போன் நம்பர்கூட என்கிட்ட கிடையாது. நாம் ரொம்ப நல்ல பையன். ( நம்பறோம்ம்ம்..! )

ஆரம்பத்துல சின்னச்சின்ன வேடங்கள்ல நடிச்ச நீங்க, இப்ப ஹீரோ ஆகிட்டீங்க. இனிமேல் ஹீரோ மட்டும்தானா? ஒன்லி ஆப்பிள் ஜூஸா..?!"அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. ஹீரோவாக நடிக்க என் திறமையையும், அர்ப்பணிப்பையும் எந்த அளவுக்குத் தந்தேனோ, அதே அளவுக்குத்தான் சின்னச்சின்ன வேடங்களுக்கும் தர்றேன். இனிமேல் ஹீரோவா மட்டுமே நடிப்பேன்னு எல்லாம் கிடையாது. சின்னச்சின்ன வேடங்கள்னாலும் ரசிகர்களை அட! ன்னு சொல்ற மாதிரி இருந்தால் கண்டிப்பாகச் செய்வேன். என்னைப் பொருத்தவரை, செய்யற வேலையை ரசிச்சு முழுமனசோட செய்யணும்.. ரோல் பெரிசா, சின்னதான்னு எல்லாம் நான் கவலைப்படறாதில்லை..!"

No comments:

Post a Comment