Monday 27 August 2012

எல்லா பெருமையும் எஸ்.ஏ.சி-க்கு தான்! : ஷங்கர்


தமிழில் விஜயகாந்த், இந்தியில் ரஜினிகாந்த், மலையாளத்தில் கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி என நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளியான எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்றது எஸ்.ஏ.சந்திரசேகரின் 'சட்டம் ஒரு இருட்டறை'. இப்படம் மீண்டும் தமிழில் ரீமேக்காகிறது.

இம்முறை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பு மற்றும் இயக்கம் மேற்பார்வை ஆகியவற்றை மட்டும் மேற்கொள்கிறார். ரீமேக் படத்தினை 'இயக்குகிறார் சினேஹா பிரிட்டோ. ரீ‌மாசென், பியா, பிந்துமாதவி, 'ஆச்சர்யங்கள்' பட நாயகன் தமன்குமார், சின்னத்திரை நகைச்சுவையாளர் மகேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

'சட்டம் ஒரு இருட்டறை' படக்குழுவையும், FIRST LOOK-ஐயும் இயக்குனர் ஷங்கர் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவர் பேசியது :

"நான் பெரிதாக எதுவும் சாதித்ததாக எனக்கு என்றுமே தோன்றியது கிடையாது. அப்படி நான் ஏதாவது சாதித்திருக்கிறேன் என நீங்கள் யாராவது கருதினால் அந்த பெருமை மொத்தமும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களையே சாரும். காரணம் இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர்களிடம் உதவியாளராக சேருவதற்கு முன் ஒருசில மேடை நாடகங்களில் நடித்தபடி நாடக நடிகராக இருந்த நான், மிகுந்த சோம்‌பேறியாகவும் இருந்தேன்.

அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு தான் சென்றேன். ஆனாலும் உதவி இயக்குநர் ஆகிவிட்டேன். எஸ்.ஏ.சி. அவர்களிடம்தான் சுறுசுறுப்பு என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டேன். அதேமாதிரி ஒழுக்கம், நேரம் தவறாமை, திட்டமிடல் உள்ளிட்டவைகளையும் அவரிடம் கற்றுகொண்டு தான் இன்று ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன்.

என்னை மாதிரி ஏராளமானவர்களை வளர்த்துவிட்டவர் இயக்குநர் எஸ்.ஏ.சி. அவரிடமிருந்து புதிதாக வந்திருக்கும் இளம் பெண் இயக்குநர் சினேகா பிரிட்டோவும், இந்த படமும், இதில் நடித்திருக்கும் நட்சத்திரங்களும், பணிபுரிந்திருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் " என்று தெரிவித்தார்.

அவ்விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது " ஷங்கரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அன்றும் சரி, இன்றும் சரி, சொன்னால் சொன்னபடி நடந்து கொள்வார். ஒரு படவிழா, நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்றேன். என்ன விழா, ஏதுவிழா என்று எதுவும் கேட்காமல் சொன்ன நேரத்திற்கு இங்கு வந்துவிட்டார். அதுதான் ஷங்கர்.

அவர் என்னிடம் உதவியாளராக இருந்து என்ன கற்றுக் கொண்டாரோ எனக்கு தெரியாது... ஆனால் அவரிடம் இத்தனை பிஸியிலும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் திறமை என்னை வியக்க வைக்கும் விஷயமாகும். இன்று கூட எங்கோ உள்ள பெருங்குடியில் ஷூட்டிங்கில் இருந்தவர் எனக்காக இங்கு வந்திருக்கிறார்.

'சட்டம் ஒரு இருட்டறை' பழைய படத்தில் குடும்பத்திற்காக ஒரு இளைஞனின் போராட்டத்தை சொல்லி இருந்தேன். இதில் காதலுக்காக ஒரு இளைஞனின் போராட்டத்தை இன்றைய ரசிகர்களின் ரசனைக்கேற்ப பிரமாண்டமாக சொல்ல வேண்டும் என்றார் என் பேத்தி சினேகா பிரிட்டோ. அதற்காகத்தான் இந்த அறிமுக விழாவிற்கு பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை அழைத்திருந்தேன்" என்றார்
.

No comments:

Post a Comment