Saturday 15 September 2012

காமெடி நடிகர் லூஸ் மோகன் மரணம்!


Comedy actor loose mohan passed awayகாமெடி நடிகர் லூஸ் மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. சென்னையை பூர்விகமாக கொண்ட லூஸ் மோகன் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பி.யூ.சின்னப்பாவின் நாடக குரூப்பில் சேர்ந்து நடித்து வந்தார். பின்னர் ஹரிச்சந்திரா என்ற படம்மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ‌ஆரம்பத்தில் மோகன் என்ற பெயரிலேயே லூஸ் மோகன் நடித்து வந்தார். லூஸ் - டைட் என்ற படத்தில் பிரபலமானதைதொடர்ந்து மோகன் லூஸ் மோகன் எனும் அடைமொழியோடு நடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி முதல் ரஜினி, கமல் வரை முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் லூஸ் மோகன். சென்னையிலேயே மோகன் பிறந்ததால், சென்னை பாஷை இவருக்கு மிகவும் சாதரணம். இந்த பாஷையை பேச இவருக்கு நிகர் வேறு யாரும் கிடையாது.

இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லூஸ் மோகன் மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் லூஸ் மோகனுக்கு இன்று காலை உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவர் உடனடியாக ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த லூஸ் மோகனுக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருந்தார். அவரும் கடந்த 2004-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகனும், 3 மகளும் உள்ளனர். சமீபத்தில் லூஸ் மோகன், தனது மகன் மற்றும் மருமகள் என்னை சரியாக கவனித்து கொள்வது இல்லை. பணத்திற்கு குறைவில்லை என்றாலும், "சாப்பிட்டியா, நல்லா இருக்கியா எனக் கேட்க கூட யாரும் இல்லை. மகன் இருந்தும் அனாதையாக உள்ளேன். அவர் என்னை கவனித்துக் கொண்டால் போதும். இதற்கு, போலீசார் தான் உதவி செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் தனது மகன் தன்னை கவனிப்பதாக கூறியதை அடுத்து தனது புகாரை வாபஸ் பெற்று கொண்டார்.

மறைந்த லூஸ் மோகனின் உடல், அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மாலை அவரது இறுதிசடங்கு நடைபெற இருக்கிறது.

No comments:

Post a Comment