Monday 3 September 2012

தண்ணீரையும் கொஞ்சம் தாருங்கள்! கர்நாடக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அமீர் கோரிக்கை!


Ameers demand to karnataka MLA and MPதமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி படவிழா ஒன்றில் கலந்து கொண்ட கர்நாடக எம்.எல்.ஏ., எம்.பி.க்களிடம், கோரிக்கை வைத்தார் அதே விழாவில் பங்கேற்ற டைரக்டர் அமீர். வி.பி.புரொடக்ஷன் தயாரிப்பில், அமீரின் உதவியாளர் அஸ்லம் இயக்கியுள்ள படம் பாகன். ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர், நடித்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமீர் பேசியதாவது, இயக்குனர் அஸ்லம் என்னிடம் பணியாற்றினார். இந்த கதையை அவர் பல வருடம் வைத்திருந்தார். என்னிடம் சொல்லாமல் ஒரு சாதாரண கம்பெனிக்கு அந்த கதையை எழுதிக் கொடுத்துவிட்டு அந்த தயாரிப்பாளின் மகன் நடிக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்துவிட்டார். இப்படி அவசரப்பட்டு விட்டானே இனி அவன் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் அவன் வணங்கிய கடவுள் அவனை கைவிடவில்லை. படத்தை அந்த தயாரிப்பாளர் கைவிட்டார். நான் ஸ்ரீகாந்த் நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு நடித்தார். இப்போது படம் அழகாக உருவாகியிருக்கிறது.

சினிமாவில் ஒருவரை ஒருவர் பாராட்ட வேண்டும். அந்த கலாச்சாரம் இப்போது வளர்ந்திருக்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக் கொள்கிறார்கள். சிலர் நாம் எழுந்து விட்டால் நம் இடத்தில் இன்னொருவர் உட்கார்ந்து விடுவாரோ என்ற நினைக்கிறார்கள். அது தவறு. சினிமா ஒன்றும் முக்கு சந்தல்ல. அது பெரிய பீச். நாம் இங்கிருந்து சென்றால், வெறொருவர் இன்னொரு திசையிலிருந்து நம்மை விட வேகமாக வந்து கொண்டிருப்பார். எல்லோரையும் அள்ளி அணைத்துக் கொள்ளும் இடம் சினிமா.

வேறு மாநிலம், வேறு மொழி கலைஞர்களைகூட அன்பாக அள்ளி அணைத்துக் கொள்கிறோம். இந்தப் படத்தை கன்னடத்தை சேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் எந்த வேறுபாடும் பார்க்காமல் இங்கு அனைவரும் கலந்து கொண்டிருக்கிறோம். இங்கே பேசிய கர்நாடக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள். நாங்கள் உங்களுக்கு ரஜினியையும், அர்ஜுனையும் தந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். இன்னும் நிறைய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களை தாருங்கள் அள்ளி அணைத்துக் கொள்கிறோம். அதோடு கொஞ்சம் தண்ணீரும் தாருங்கள் என்று கேட்கிறோம். இங்கு நாங்கள் செலுத்தும் அன்பை உங்களுக்கு நாங்கள் தரும் ஆதரவை உங்கள் சட்டமன்றத்தில் காவிரி பிரச்சினை வரும்போது சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

விழாவில் இயக்குனர்கள் அமீர், சுசீந்திரன், சமுத்ரகனி, விஜய், பிரபு சாலமன், கரு.பழனியப்பன், நடிகர் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், ராமகிருஷ்ணா, நடிகைகள் நமீதா, சுஜா வாருணீ, ஜனனி ஐயர், தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் சிவா, வேந்தர் மூவீஸ் ரகு மற்றும் கர்னாடக மந்திரி அணில் லாட், சந்தோஷ் லாட் எம். எல். ஏ., நந்தீஸ் ரெட்டி எம். எல். ஏ. ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

No comments:

Post a Comment