Saturday 15 September 2012

சுந்தரபாண்டியன்-விமர்சனம்



நடிப்பு: எம் சசிகுமார், லட்சுமிமேனன், நரேன், சூரி, தென்னவன், அப்புக்குட்டி, இனிகோ பிரபாகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜா

இசை: என் ஆர் ரகுநந்தன்

ஒளிப்பதிவு: ச பிரேம்குமார்

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

தயாரிப்பு: எம் சசிகுமார்

எழுத்து-இயக்கம்: எஸ் ஆர் பிரபாகரன்



தன் பலம், தனக்கேற்ற கதையை சரியாக தேர்வு செய்வதில் மீண்டும் ஒரு முறை ஜெயித்திருக்கிறார் சசிகுமார். அந்த வகையில் சுந்தரபாண்டியன் அவருக்கு இன்னொரு சுப்பிரமணியபுரம்.

நண்பர்களுக்குள் நெருக்கமும் சரி, பெரும்பகையும் சரி... அதன் பின்னணி காதல்தான் என்பது அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சசிகுமார். அவரது நண்பர்கள் பரோட்டா சூரி, இனிகோ பிரபாகரன். சசிகுமார் ஒரு பெண்ணைக் காதலிக்க, அந்தப் பெண்ணை அவர் நண்பனும் ரூட் விட, அதே பெண்ணை நண்பனின் நண்பனும் டார்கெட் பண்ண, அதில் சசிகுமார் ஜெயிக்கிறார்.

தோல்வியை ஒரு நண்பன் சகித்துக் கொள்ள, மற்றொருவனோ லட்சுமியிடம் வம்பு செய்கிறான். தொடரும் கைகலப்பில் பஸ்ஸிலிருந்து தள்ளப்பட்டு செத்துப் போகிறான். கொலைப் பழியை சசிகுமார் ஏற்று சிறை சென்று, 15 நாள் காவலுக்குப் பிறகு வெளியில் வர, காதலி கண்டு கொள்ளாமல் போகிறாள்.

இருவரும் இணைந்தார்களா என்பது மறுபாதி. இந்தப் படத்தைப் பொறுத்தவரை அந்த மறுபாதிக் கதைதான் செம த்ரில்லிங் என்பதால், திரையில் பார்த்து சசிகுமார் அண்ட் நண்பர்களுக்கு மரியாதை செய்யுங்கள்!

காதல் அரும்பும் பருவத்தில் இனி இளைஞர்கள் ரொம்ப சூதானமா நடந்துக்கணுமப்பா... என்று சொல்லவைக்கும் ஷார்ப்பான திரைக்கதை. புதிய இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரனை வாழ்த்தி வரவேற்கலாம்.

சசிகுமாரின் முகத்தில் முன்பெல்லாம் எப்போதாவது எட்டிப் பார்க்கும் செயற்கைத்தனம் கூட இதில் இல்லை. ஒரு நடிகராக இந்தப் படத்தில் நூறு சதவீதம் ஜெயித்திருக்கிறார். ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி ஒரு ரஜினி ரசிகன் நிச்சயம் இருந்தே தீருவான். அதை அழகாக நம்முன் நிறுத்தியிருக்கிறார்.

ரஜினி ரசிகராக அமர்க்களமாக அறிமுகமாவதில் தொடங்கி, நம்மைக் கொலை பண்ண வந்தது நம்ம நண்பனா இருந்தா அவனைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுடா என முத்திரை வசனம் சொல்வது வரை... சசிகுமார் கொடி பறக்குது!

லட்சுமி மேனனுக்கு இது முதல் படம். ஒப்பனையில்லாத அழகி. பிரகாசமான எதிர்காலம்.

இந்தப் படத்தின் Show stealer என்றால் அது சசிகுமாரின் தந்தை ரகுபதி தேவராக வரும் நரேன். லட்சுமியை பெண் கேட்கும் காட்சியில் அப்படி ஒரு கம்பீரம்.. காட்சிப்படுத்திய விதம், இடம்பெற்ற நடிகர்களின் பங்களிப்பு என எல்லா வகையிலும் அந்த 4 நிமிடக் காட்சி.. .A pure manly show!

தென்னவன் இன்னொரு மிகச் சிறந்த நடிகர். ஒரு பெண்ணைப் பெற்றவனின் ஆத்திரம், அக்கறை, வேதனை, பாசம் அனைத்தையும் நிஜமாகக் காட்டியிருக்கிறார்.

பரோட்டா சூரியின் ராஜ்ஜியம்தான் முதல் பாதியில். அவரது ஒன்லைனர்கள் நிச்சயம் நண்பர்களின் உதடுகளில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இருக்கும்.

இனிகோ பிரபாரகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜன், அந்த பாட்டிகள், சித்தி, அத்தைப் பெண் என அத்தனை பேரும் நடிகர்களாகத் தெரியாமல், கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள்.

அப்புக்குட்டி கிட்டத்தட்ட வில்லன். கொஞ்சம் வெறுப்பைச் சம்பாதிக்கும் ரோல்தான். நன்றாகவே செய்திருக்கிறார்.




ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு பெரிய ப்ளஸ். பாடல் காட்சிகளில் பாலுமகேந்திரா சொன்னதைத்தான் திரும்ப சொல்ல வேண்டும்! அந்த முள்காட்டு பயங்கரத்தை முதுகு தண்டு சில்லிடும் அளவுக்கு சொன்னதில் இயக்குநருக்கு இணையான பங்கு, காமிராக்காரருக்கும்!

படத்தின் ஆகப் பெரிய மைனஸ் இசை. இசையமைப்பாளர் ராஜாவின் ரசிகரோ அல்லது ராஜா இசையால் பெரிதாக பாதிக்கப்பட்டவரோ தெரியவில்லை. காதல் வந்து பொய்யாக, ரெக்கை முளைத்தேன், நெஞ்சுக்குள்ளே... என அவர் போட்ட பாடல்கள் திரையில் வரும்போது, நமக்கு ராஜாவின் ஏதோ மோகம், ஒருகிளி உருகுது, அம்மம்மா (தாலாட்டுப் பாடவா...), பாடல்கள்தான் காதுகளில் கேட்கின்றன!!

இன்ஸ்பிரேஷனுக்கும் இமிடேஷனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டாவது படத்திலேயே காணாமல் போகும் இசையமைப்பாளராக ரகுநந்தன் மாறாமலிருக்கக் கடவது!

சசிகுமாரின் பலம், பலவீனம் புரிந்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ் ஆர் பிரபாகரனின், முதல் முயற்சியே சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. வெற்றி தொடர வாழ்த்துகள்!

No comments:

Post a Comment