Thursday 10 January 2013

பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன்...கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி ஆவேசம்!


Abirami                               
    பிரபல இயக்குனர், இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதை எழுத்தாளர், நடிகர், அரசியல்வாதி என்ற பன்முகம் கொண்ட சாதனையாளரான கே.பாக்யராஜே அத்தகைய புகாரோடு காவல் துறையை நாடியிருக்கிறார். கே.பாக்யராஜால் குற்றம் சுமத்தப்படுகிறவர்களும் சாதாரண மனிதர்களல்ல. சினிமாவில் மிக முக்கியமான இடத்திலிருப்பவர்கள்.

அந்த புகார் மனுவில் கே.பாக்யராஜ் யார் யாரையெல்லாம் குறை கூறியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், புகாருக்குரிய படம் எது என்பதை பார்ப்போம். பிரபல இயக்குனர் இராம.நாராயணன், மற்றும் நகைச்சுவை நடிகர் சந்தானம் இருவரும் இணைத்து தயாரித்த படம் 'கண்ணா லட்டு திங்க ஆசையா'. இப்படத்தை கே.எஸ்.மணிகண்டன் என்ற புதியவர் இயக்குகிறார். முக்கியமாக சந்தானத்துடன் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார்.

ஹீரோயின் விஷாகாவை சந்தானம், சீனிவாசன், சேது என்ற அறிமுக ஹீரோ ஆகிய மூவரும் காதலிக்க, யார் விஷாகா மனசில் இடம் பிடிக்கிறார்கள் என்பதுதான் கதையாம்.

இதில் விஷாகாவை கவர நினைக்கும் சந்தானம், அவரது அப்பாவான விடிவி கணேஷிடம் சங்கீதம் கற்கிறாராம். கழுத்து நிறைய தண்ணீரில் மூழ்கினால் ஸ்ருதி வரும் என்று ஐடியா கொடுக்கும் கணேஷ், அவரை பெரிய நீர் நிரம்பிய குவளைக்குள் இறக்கி சாதகம் சொல்லிக் கொடுக்கிற காட்சியும் இருக்கிறது. இப்படி மூவரும் அவரவர் திறமைக்கு ஏற்ப விஷாகாவை கவர முயல்வதுதான் இந்த படத்தின் மொத்த கதையும். நாற்பதை கடந்தவர்களும், ரெகுலராக சின்னத்திரையில் படம் பார்ப்பவர்களும் சட்டென யூகித்துவிட முடியும், இது 'இன்று போய் நாளைவா' கதையாச்சே என்று! அந்த படத்தில் ஒரு இந்தி வாத்தியார் என்றால் இந்த படத்தில் ஒரு பாட்டு வாத்தியார். இப்படி போட்டுக் கலக்கி கலக்கல் காமெடி சர்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் சந்தானம்.
இந்த நிலையில் 'இன்று போய் நாளைவா' படத்தின் கதைக்கான முழு உரிமையும் தன்னிடம் இருக்க, அதை வேறு ஷேப்பில் அடிக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் போலீசுக்கே போய்விட்டார் பாக்யராஜ்.
ஆணையாளரிடம் அவர் அளித்திருக்கும் புகாரின் சாரம்சம் இதுதான். 1981 ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் இன்று போய் நாளை வா. ஒரு பெண்ணை மூன்று பேர் காதலிக்க ஆசைப்படும் இந்த கதை நானே எழுதியது. இதன் மூலக்கதை, திரைக்கதை, வசனம், இம்மூன்றும் என் உழைப்பில் உருவானவை. இப்படத்தையும் நானே இயக்கியிருக்கிறேன்.
இடையில் இப்படத்தை இந்தியில் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நைஹா ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் நானே இதன் உரிமையை விற்றிருக்கிறேன். தயாரிப்பாளரான பி.வி.டெஹ்ரானிக்கும் இது தெரியும். கதை எனக்கே சொந்தம் என்பதால் அவர் இதை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் இப்படத்தை தமிழில் மீண்டும் உருவாக்க நினைத்த தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி என்னை தொடர்பு கொண்டு இதன் உரிமையை கேட்டார். நான் என் மகன் சாந்தனுவை ஹீரோவாக்கி நானே அந்த கதையை எடுக்கப் போவதாக கூறினேன். அதன்பின் டைரக்டர் இராம.நாராயணன் என்னை அணுகி இன்று போய் நாளை வா படத்தின் கதை உரிமையை கேட்டார். அவரிடமும் அதே பதிலை சொன்னேன்.
ஆனால் தற்போது உருவாகி விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'கண்ணா லட்டு திங்க ஆசையா' படம் 'இன்று போய் நாளைவா' படத்தின் பிளாட்தான் என்று அப்படத்தின் ஹீரோவான சந்தானமே பேட்டிகளில் கூறி வருகிறார். என்னிடம் ரீமேக் உரிமையை வாங்காமல் இந்த படத்தின் நெகட்டிவ் உரிமையை வாங்கி வைத்திருக்கும் ஆர்.வி.மணி என்பவரிடம் உரிமை வாங்கி படமெடுப்பது செல்லாது. என் அனுமதியில்லாமல் என் கதையை படமாக்குவது மோசடியானது. எனவே இராம.நாராயணன், புஷ்பா கந்தசாமி, அவரது குடும்ப உறுப்பினாரான ஜனனி கந்தசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார் பாக்யராஜ்.
கோடம்பாக்கத்தையே அதிர வைத்திருக்கும் இந்த கதை திருட்டு விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது. தனது கதையைதான் படமாக்குகிறார்கள் என்பதை முன்பே அறிந்து வைத்திருந்தாராம் பாக்யராஜ். அவ்வப்போது சந்தானத்தை சந்திக்கும் போதெல்லாம், இந்த சீனை எப்படி எடுத்தீங்க, அந்த சீன் எப்படி வந்திருக்கு என்றெல்லாம் பாக்யராஜ் விசாரித்து வந்தததாகவும் நம்மிடம் கூறினார்கள் சந்தானம் தரப்பினர். இப்போது எழுப்புகிற பிரச்சனையை அப்போதே அவர் எழுப்பியிருந்தால் கூட பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம். ஆனால் படம் வெளியாகிற கடைசி நேரத்தில் இப்படி செய்துவிட்டாரே என்று பாக்யராஜின் செயலை கவலையோடு அலசுகிறது சந்தானம் வட்டாரம்.
ஆனால் அப்படியே நேர்மாறாக புலம்பல் சப்தம் கேட்கிறது பாக்யராஜ் அலுவலகத்தின் பக்கம். தனது கதையை ரைட்ஸ் வாங்காமல் படம் எடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட எங்க டைரக்டர் பலமுறை இராம.நாராயணனிடம் அதுகுறித்து பேசி வந்தார். அப்போதெல்லாம் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்றே கூறிவந்தார் அவர். கடைசி நேரம் வரைக்கும் இப்படி இழுத்ததடித்தால்தான் போலீசுக்கு போக நேர்ந்தது. இது எங்க டைரக்டரே விரும்பாமல் செய்த அதிரடி முயற்சிதான் என்கிறார்கள் இந்தப் பக்கம்.



ஜனவரி 7 ந் தேதி பாக்யராஜ் பிறந்த நாள் என்பதால் அவர் செம பிஸி. வெளியூர்களிலிருந்து வந்த ரசிகர்களை சந்திப்பது, குடும்பம் மற்றும் உறவினர் நண்பர்களோடு நட்சத்திர ஓட்டலில் கொண்டாடுவது என பதில் சொல்ல நேரமில்லாமல் பறந்து கொண்டிருந்தார். அவ்வளவு அவசரத்திற்கு இடையிலும் நம்மிடம், 'தயாரிப்பாளர் கேயார் மாதிரி என்னுடைய நலம் விரும்பிகள் இந்த பிரச்சனை தொடர்பா பேசிட்டு வர்றாங்க. விரைவில் ஒரு நல்ல முடிவு வரும்னு நம்புறேன்' என்றார்.
பாக்யராஜால் குற்றம் சாட்டப்பட்ட புஷ்பா கந்தசாமியிடம் பேசினோம். இந்த பிரச்சனையில் எதுக்கு என் பெயரை இழுக்கிறார்னு தெரியல. அவரை சந்தித்து நான் இன்று போய் நாளை வா படத்தின் ரீமேக் உரிமையை கேட்டேன்னு சொல்றதே சுத்த பொய். நான் எந்த நேரத்திலும் அவரை சந்திச்சு இது பற்றி கேட்கல. முன்பெல்லாம் தமிழ் படங்களை தமிழிலேயே ரீமேக் செய்யும் வழக்கம் இல்லாமலிருந்தது. இப்போதுதான் அந்த வழக்கம் வந்திருக்கிறது.
இது மாதிரி ரைட்ஸ் வேணும்னு நினைக்கிறவங்க அந்த காப்பி ரைட்ஸ் யாரிடம் இருக்கோ, லேப் என்டாஸ்மெனட் யாருகிட்ட இருக்கோ, அவங்ககிட்டயே வாங்கிக்கிற வழக்கமும் இருக்கு. டைரக்டருக்கு முழு பணத்தையும் செட்டில் பண்ணிவிடுகிற போது இந்த உரிமையையும் எழுதி வாங்கிக்கிற தயாரிப்பாளர்களும் இங்கு உண்டு. ஆர்.வி.மணியிடம் நான் வாங்குவதற்கு முன் சட்டப்படி உறுதி படுத்திக் கொண்ட பிறகுதான் வாங்கினேன். அது மட்டுமல்ல, சினிமா சங்கங்களிடம் ஆலோசனை கேட்டுதான் வாங்கினேன். ஏதோ பெரிய அளவில் பணம் கைமாறிவிட்டதாகவும் அவர் நினைக்கிறார். உண்மையில் அதுவும் இல்ல.
யாரையும் ஏமாத்தி சம்பாதிக்கணும்னு நினைக்கிற குடும்பத்திலிருந்து நான் வரல. எங்க அப்பா பாலசந்தர் சாரிடம் இல்லாத கதையையா நான் இன்னொருத்தரிடமிருந்து வாங்கி ரீமேக் பண்ணணும்?
இதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த விஷயத்துல தொடர்ந்து அவர் என் பெயரை யூஸ் பண்ணினா நானும் சட்டப்படி அவர் மீது வழக்கு தொடர வேண்டி வரும்' என்றார் கோபமாக!
ஒருவேளை பாக்யராஜ் தனது தரப்பு நியாயத்தை நிரூபித்துவிட்டால், 'கண்ணா திருட்டு லட்டு திங்க ஆசையா'ன்னு தலைப்பையே கூட மாற்றிவிடலாம்!

No comments:

Post a Comment