தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சம்மேளனத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் அனைவரும், கமலின் புதிய முயற்சியான டி.டி.எச்-ல் படத்தை வெளியிடும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் திரையரங்கு உரிமையாளர்களுடன் இன்னும் ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இப்பிரச்னைக்கு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தயாரிப்பாளர் கேயார் கூறுகையில், கடந்தாண்டு 129 படங்கள் ரிலீசானது. இந்தாண்டு 148 படங்கள் ரிலீசாகி உள்ளது. இதில் 8 படங்கள் மட்டுமே ஹிட்டாகியுள்ளது. அப்படி ஹிட்டான படங்களும் கூட சிறு முதலீடு படங்கள் தான். இன்றைய சூழலில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட படங்கள் சென்சார் செய்யப்பட்டு தியேட்டர் கிடைக்காமலும், வருவாய் பிரச்னைகளாலும் ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அப்படி இருக்கையில் கமலின் இந்த முதிய முயற்சி வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் கமலுக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். நேரடியாக ஒருநாளில் படத்தை ரிலீஸ் செய்வதால், தியேட்டர் விநியோகம் பாதிக்காது என்று கூறியுள்ளார்.
பாரதிராஜா கூறும்போது, கமலை வைத்து 16 வயதினிலே படத்தை எடுத்தபோது, அதில் அவரை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன். இந்தபடம் எல்லாம் நன்றாக ஓடப்போகிறதா என்று ஏளனம் செய்தார்கள். எப்பவும் சோதனைகளை சாதனைகளாக்கி அதில் வெற்றி பெறுபவர் கமல். கமலின் இந்த புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. இதனால் அனைவரும் பயன்பெறுவர். மேலும் இப்படியொரு முயற்சியால் ரசிகர்களை தியேட்டருக்கும் இழுத்து வர முடியும். பொதுவாக நான் இதுபோன்ற விஷயத்தில் தலையிடுவது இல்லை. ஒரு தயாரிப்பாளராக கமலின் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். ஆரம்பத்தில் எந்த ஒரு திட்டத்திற்கும் எதிர்ப்பு இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு தொலைநோக்கு பார்வையோடு இதனை பார்க்க வேண்டும். தியேட்டர் உரிமையாளர்களும் பெருந்தன்மையோடு கமலின் முடிவை ஆதரிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக மாநில அரசையும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிலிம் சேம்பர் உறுப்பினர் பிரசாத் கூறுகையில், நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக கமலின் முடிவை நாம் வரவேற்க வேண்டும். தயாரிப்பாளர்கள் அனைவரும் அவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டும். ஒருநாளில் ரிலீஸ் செய்வதால் தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment