எப்படி வந்திருக்கிறது "சகுனி'?
ரொம்பவே சூப்பர். நல்ல படம். அருமையான கதை. சொந்தப் பிரச்னையை தீர்க்க வருகிற ஒருவன், பொதுப் பிரச்னைக்குள் சிக்கி, தன் பிரச்னையை எப்படி முடித்துக் கொண்டான் என்பதை ஆக்ஷன் ப்ளஸ் காமெடியில் சொல்லியிருக்கிறோம். நம்மை சுற்றி எப்போதுமே ஒரு அரசியல் இருக்கும்.
அரசியல் பண்ணாதவங்க, அதில் சிக்கி கொள்ளாதவர்கள்ன்னு யாரும் இருக்க முடியாது. எங்கெங்கும் நொடிக்கு நொடி அரசியலில்தான் சிக்கி இருக்கோம். அதுதான் கதையோட பேஸ். கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருகிற என் பயணம்தான் கதை.
ராதிகா, மும்தாஜ், கோட்டா சீனிவாசராவ்ன்னு எல்லோருமே அருமையான நடிகர்கள். அவர்களுக்கு முன் நடித்ததில் எனக்கு கொஞ்சம் சவால் இருந்தது. காமெடியில் "சிறுத்தை' உச்சம். அதை நிச்சயம் இது தாண்டும்.
சந்தானம்தான் அதற்கு துணை. மகாபாரத்தில் சகுனி வருகிற இடமெல்லாம் அத்தனை கலகலப்பாக இருக்கும். யாரையும் அவர் விட்டு வைக்க மாட்டார். அது மாதிரியே இதுவும் இருக்கும். இதற்கு முன் இப்படியொரு ஷூட்டிங் ஸ்பாட்டை பார்த்ததில்லை. அந்தளவுக்கு ஆரவராமக முடிந்திருக்கிறது.
இரண்டு படங்கள் நடித்தால் அதில் ஒன்று ஆக்ஷன் படம் என முடிவு செய்து விட்டீர்களா?
என் சினிமா கேரியரில் "பருத்தி வீரன்', "சிறுத்தை' இரண்டு படங்களிலும் பர பர ஆக்ஷன் இருக்கும். "நான் மகான் அல்ல' புதுக்களம். "பையா' ரொம்பவே மாறியிருந்தது. "பையா'வுக்கு அப்புறம் நடிக்கிற படங்கள் வேறோரு கோணத்தில் இருக்க வேண்டும் என நினைத்தேன். அது போலவே படங்கள் வந்தன. "சகுனி'யில் காதல், கமர்ஷியல், ஆக்ஷன் என எல்லாமே சரியா இருக்கும். அலெக்ஸ் பாண்டியனில் முழுக்க முழுக்க ஆக்ஷன்தான்.
இப்படியொரு ஆக்ஷன் படம் நடிப்பதற்கே ஆசையாக இருக்கிறது. சினிமாவில் எந்தப் படம் ஜெயிக்கும் என யாரும் முடிவு செய்து விட முடியாது. புதுசா கதை சொல்ல வருகிற டைரக்டர் கதையை மட்டும்தான் சொல்லுவார். எங்கே பாட்டு, பைட்டு வைக்க வேண்டும் என நாமே யோசிக்க வேண்டி இருக்கிறது.
அப்படி யோசிக்கும் போது கூட சில படங்கள் அடி வாங்குகிறது. இந்த ரிஸ்க் இல்லாமல் ஒரு அலெக்ஸ் பாண்டியனை வடிவமைத்துக் கொண்டு இருக்கிறோம். "பையா'வுக்குப் பின் மீண்டும் அப்படி ஒரு படத்தில் நடிக்க தோன்றவில்லை. அதற்குதான் இந்த ஆக்ஷன் வேடம்.
ஆக்ஷன் படங்களுக்கு இப்ப நல்ல வரவேற்பு இருக்குதானே? இதோ இது முடிந்தவுடன் "அழகுராஜா' படத்தில் நடிக்கிறேன். காதல், காமெடி, பாட்டுன்னு சரி சமமாக கலப்பதில் ராஜேஷ் சார் ஸ்பெஷல். அதனால் அந்தப் படம் வேற வெரைட்டி.
""அனுஷ்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும்''ன்னு சூர்யா சொல்லுவார். ஆனா அவங்க "அலெக்ஸ் பாண்டியன்' ஹீரோயின் ஆகிட்டாங்களே?
அட போங்க... வெட்கமாக இருக்கு... இதுவரை என் கூட நடித்த ஹீரோயின்கள் எல்லோரும் என்னை அண்ணாந்து பார்த்துதான் பேசுவாங்க. டூயட் ஆடும் போது கஷ்டமாக இருக்கும். ஆனால் அனுஷ்கா கிட்டத்தட்ட என் உயரத்தில் இருக்காங்க. டான்ஸில் அவங்களோடு போட்டி போட முடியவில்லை. ஆனாலும் ஈடு கொடுத்திருக்கிறேன். ஃபுல் ஸ்பீடு டான்ஸில் ஒரு பாட்டு இருக்கு. நல்லா இருக்கும்.
பாலிவுட் மாதிரி கோலிவுட்டிலும் எல்லா நடிகர்களும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். உங்களுக்கும் அது மாதிரியான திட்டம் ஏதாவது இருக்கிறதா?
நான் எந்தப் படத்திலும் வலுக் கட்டாயமாக நடிக்க முடியாது. அப்படி நடித்தால் அது சரியான சினிமாவாக இருக்காது. "சிறுத்தை' படம் வந்து ஒரு வருஷத்துக்கு மேல் ஆகி விட்டது. எனக்கு சரசரவென்னு படங்கள் முடிக்க பிடிக்காது. சரியா, நிதானமாக போய்க்கிட்டே இருக்கேன். நல்ல படங்களாக பார்த்து நடித்தாலே போதும் என்றுதான் சினிமாவுக்கே வந்தேன்.
இது வரைக்கும் அந்த ப்ளான் சரியாக போய்க் கொண்டு இருக்கிறது. இனியும் அப்படித்தான். பெரிய பெரிய இயக்குநர்கள் படத்தில் நடித்து விட்டு, திடீரென சிவா வந்து ஒரு கதை சொன்னார். பிடித்திருந்தது. அவர் அறிமுக இயக்குநர் என்று பார்க்கவில்லை. அதுதான் "சிறுத்தை'. எனக்கு நல்ல சினிமா வேண்டும். அ
தை யார் தந்தாலும், யாரோடு வேண்டுமானாலும் நடிக்கலாம். இனி அப்படிப்பட்ட படங்களும் வரலாம். யார் மீதும் தீராத பகை இல்லை. எல்லோரையும் நண்பர்களாவே பார்க்கிறேன். கதை என்னை பணித்தால் நிச்சயம் அப்படி நடிப்பேன். அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.
நான்கு படங்களும் சொல்லிக் கொள்கிற வெற்றி. இப்போது அடுத்தடுத்த கதை தேர்வுகளிலும் ரொம்பவே கவனம். சினிமா முழுமையாக புரிந்து விட்டதா?
""தூங்கும் போது காலாட்டிக்கிட்டே தூங்குடா''ன்னு கவுண்டமணி சார் ஒரு காமெடியில் சொல்லுவார். அது போல்தான் இந்த சினிமா. எல்லாத்தையும் கொடுக்கும். சில நேரங்களில் எல்லாத்தையும் எடுக்கும். இதை அவ்வளவு சீக்கிரம் யாரும் புரிந்து கொள்ள முடியாது.
இங்கு யார் எதிரி யார் நண்பன்ன்னு சரியாக புரிந்துக் கொள்ள முடியவில்லை. என் நண்பர்கள் வீட்டில்தான் எதிரிகளும் இருப்பார்கள்ன்னு தோணுது. சினிமாவுக்கு வந்த புதிதில் ரொம்பவே விளையாட்டுத் தனம் இருக்கும். இப்போது அது மாறிவிட்டது. சில நேரங்களில் நான் நானாகவே இருக்க முடியவில்லை. கவனம் ரொம்பவே வந்திருக்கு. இது நல்ல விஷயம். எந்த படமானாலும் ஒரு வாரம்ன்னு முடிவாகி விட்டது.
இந்த வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ். ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமைக்கு வேறொரு படம். இந்த சினிமா இன்னும் மாறலாம். அதுக்கு தக்கப்படி என்னை நான் வடிமைக்கணும். ""ரசிகன் வாங்குகிற டிக்கெட்டுக்கு சரியான திருப்தியை கொடுக்க வேண்டும்''ன்னு அண்ணன் சூர்யா சொல்லுவார். அதில் கவனமாக இருக்கிறேன்.
நண்பன் - எதிரி என பேசும் போது..... இயக்குநர் அமீருடனான பகை....?
நிறைய விஷயங்கள் இருக்கிறது. இப்போது அது எதற்கு. பெரிதாக ஒன்றுமில்லை. எதிரிகளும் இல்லை. நண்பர்களும் இல்லைன்னு அரசியலில் சொல்லுவார்கள். சினிமாவிலும் அப்படித்தான். எதுவும் நடக்கும். இப்போது என் வழியில் நான். வேறு எதுவும் இல்லை.
அருமையான கல்யாணம். எப்படி இருக்கிறது இந்த புது வாழ்க்கை?
நிறைய கொடுத்திருக்கிறது. திகட்டாத சந்தோஷ தருணங்களை இப்போதும் கடந்துக்கிட்டே இருக்கிறேன். நடையாய் நடந்து, ஓரிடத்தில் ஒன்றாக அமர்ந்து நிறைய பேசுறோம். இப்படி, அப்படின்னு நிறைய விஷயங்கள் ஒரு குழந்தையைப் போல் பேசுறாங்க. கல்யாணத்துக்கு அப்புறம்தான் எல்லோருக்கும் வாழ்வின் முக்கியமான தொடக்கம் இருக்கும் என நினைக்கிறேன். அதை உணரவும் செய்திருக்கிறேன். ஒரு நண்பனாக என் வெற்றி, தோல்விகளில் பங்கெடுத்து கொள்ள எப்போதும் என் பக்கத்தில் இருக்காங்க. கல்யாணத்துக்கு முன் தனிமை அதிகமாக பிடிக்கும். இப்போது தன்மை பிடிக்க வில்லை.
No comments:
Post a Comment