Monday, 18 June 2012

நீங்கதான் சரியான ஆள்' என்று வாழ்த்தினார் டிஜிபி விஜயகுமார். அர்ஜூன்



தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருக்கும் அர்ஜுனை பிடிப்பது கஷ்டம்தான். சொன்னபடியே ஒரு காலை நேரத்தில் அழைத்தார் தமிழ் சினிமாவின் ஜென்டில்மேன்.
 

மணிரத்னத்தின் "கடல்', வஸந்தின் "மூன்று பேர் மூன்று காதல்', "பிரசாத்', "வனயுத்தம்' தெலுங்கில் ஒன்று, ஹிந்தியில் ஒன்று என தொடர்ந்து படங்கள் காத்திருக்கிறது. "அர்ஜுன் இஸ் பேக்'ன்னு எடுத்துக் கொள்ளலாமா?


நான் எப்போதுமே பரபரப்பாகத்தான் இருக்கிறேன். இந்த சினிமாவுக்குள் வந்து முப்பது வருஷம் ஆகி விட்டது. வெற்றி, தோல்வி என எல்லாம் சரி சமமாக பார்த்தாகி விட்டது. வெற்றியை தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. தோல்வியில் துவண்டு விடவும் இல்லை. அப்படியேதான் இருக்கிறேன். அதனால்தான் தொடர்ந்து இந்த சினிமாவில் சர்வே செய்ய முடிகிறது.

என்னுடன் வந்தவர்களில் நிறைய பேரை இங்கே பார்க்க முடியவில்லை. சில பேர் இருக்காங்க. அவ்வளவுதான்.


இப்போது நடிக்கிற படங்கள் எல்லாமே பிடித்திருக்கிறது. அர்ஜுனுக்கு ஏற்ற கேரக்டர்கள் இப்போதுதான் நிறைய வர ஆரம்பித்திருக்கின்றன. ஒரு விஷயம்... முன்பை விட சினிமா ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால் சினிமாவுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது.


ஆக்ஷன் சினிமாக்களிலிருந்து கொஞ்சம் விலகி நடித்திருக்கிற "பிரசாத்' படம் நல்லாவே வந்திருக்கிறது என சொல்கிறார்கள். அப்படி அதில் என்னதான் இருக்கும்?


நானே இதைப் பற்றி நிறைய இடங்களில் பேசிக் கொண்டு இருக்கிறேன். இத்தனை வருஷ சினிமா வாழ்வில் நான் ஏதோ இந்த படத்தில் புதிதாக செய்திருப்பதாக உணர்கிறேன். நல்ல கேரக்டரும், நல்ல சினிமாவும் கிடைக்கும் போதுதான் ஒரு நடிகன் முழுமை பெற்றவானகிறான்.


அப்படிப் பார்த்தால் இது எனக்கு முழு திருப்தி கொடுத்திருக்கிறது. கதை ரொம்பவே சிம்பிள். ஆனால் அது கொடுக்கும் வலி நாம் இது வரை உணராததாக இருக்கும்.


ஒரு ஆண் குழந்தை பிறந்தால் தலையெழுத்தே மாறிவிடும் என நினைக்கிற ஒரு மெக்கானிக்காக நடித்திருக்கிறேன். தலையெழுத்தை யார் மாற்ற முடியும். நினைத்த மாதிரியே ஆண் குழந்தையே பிறக்கிறது. அதுவும் வாய் பேச முடியாத குழந்தையாக பிறக்கிறது.


அந்த குழந்தை, அந்த தகப்பன், அந்த குடும்பத்தின் கவலைதான் படம். அவ்வளவு ஆத்மார்த்தமாக, இயல்பா, அழகா ஒரு படம் என் கேரியரில் நிற்கிறது என்றால், இந்தப் படமாகத்தான் இருக்கும். படத்தின் கிளைமாக்ஸ் உயிரை பிடிச்சு உலுக்குகிற மாதிரி அமைந்திருக்கிறது.


படத்தின் எட்டு வயது மகனான சங்கல்ப் நடித்திருக்கிறான். நிஜமாகவே அவன் ஒரு மாற்றுத் திறனாளி. என்னை விட படத்துக்கு இவன்தான் பலம். எல்லாவற்றையும் சுலபமாக செய்திருக்கான். படத்தில் நடிக்கும் போதே கடவுளை பக்கத்தில் பார்த்த பரவசம். படம் பாருங்கள். நீங்களும் கடவுளை உணரலாம்.


சந்தன வீரப்பனை பற்றி நிறைய சினிமாக்கள் வந்து விட்டது. "வனயுத்தம்' எப்படி வேறுபட்டு நிற்கும். அதுவும் டி.ஜி.பி. விஜயகுமாரின் கேரக்டரில் நடிப்பது பெரிய சவால்தானே?


சமூகத்தை வெறுத்து தனி மனிதனாக காட்டுக்குள் போன வீரப்பன், அங்கே ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தி காட்டியிருக்கான். மூன்று மாநில அரசுகளுக்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வீரப்பன் என்கிற தனி மனிதன்தான் சிம்ப சொப்பனம்.


அந்த காட்டை சுற்றி வளைத்து அவனை பிடிக்க போலீஸ் வகுத்த திட்டம். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க வீரப்பன் வகுத்த வியூகம். இரு தரப்பிலும் ஏற்பட்ட சேதங்கள். இதுதான் படம். வீரப்பன் உலவிய இடங்கள். தூங்கிய மரத்தடி. சமைத்து சாப்பிட்ட பாறைகள்.


சுட்டுக்கொல்லப்பட்ட இடம் என ரொம்பவே பக்கத்தில் போய் படமாக்கி வந்திருக்கிறோம். தனி மனிதனை பற்றிய சினிமாவுக்காக இவ்வளவு உழைப்பு இந்தப் படத்தில்தான் நடந்திருக்கிறது. ஆமாம். எனக்கு படத்தில் டி.ஜி.பி. விஜயகுமார் கேரக்டர். ஒரு முறை அவரை சந்தித்த போது ""சார் உங்க கேரக்டரை நான் பண்றேன்.


ஒரு ரியல் ஹீரோ கேரக்டரை ஒரு ரீல் ஹீரோ பண்றேன்''னு அவரிடம் சொன்னேன். வாய் விட்டு சிரித்தவர். ""நல்லாவே பண்ணுங்க. உங்களைப் பற்றி எனக்கு தெரியும். நீங்கதான் சரியான ஆள்''ன்னு வாழ்த்தினார். ரொம்பவே சந்தோஷம். நிச்சயம் ஒரு நல்ல இடத்தை இந்த சினிமா தொடும்.


"கடல்' படத்தில் மூன்று விதமான கெட்டப்புகள் என செய்திகள் வந்திருக்கிறது. நிச்சயம் கலர், டோன், குரல், பாடி லாங்வேஜ் எல்லாமே மாறும்தானே?



இந்த கேள்விக்கு ஒரே வார்த்தைதான் பதில்... அது மணிரத்னம் சார். அவருக்கு இப்படி ஒரு இடம் சும்மா வரவில்லை. ஒரு நிமிஷம் வந்து விட்டு போகிற ஷாட்டாக இருந்தாலும் அவர் ஈஸியாக எடுப்பதில்லை. எந்த காட்சியாக இருந்தாலும் மணி சாருக்கு ஒரே தீர்மானம்தான்.


அது இதுவென எந்த ஆப்ஷனும் கிடையாது. "கடல்' படத்தில் பெரிய வாழ்க்கை இருக்கு. இனி அவர்தான் அந்த சினிமா பற்றி சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் வருகிறேன். எல்லா கெட்டப்புகளுமே செட் ஆகி விட்டது. மணி சாரிடமிருந்து ஒவ்வொரு படத்துக்கும் அழைப்பை எதிர்பார்ப்பேன். நான் 150 படங்களை முடித்த பின்னர் இப்போதுதான் வந்திருக்கிறது அந்த அழைப்பு.


"ரிதம்' சமயத்தில் இருந்த வஸந்த் - அர்ஜுன் கூட்டணியை விட "மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் ரொம்பவே ஸ்பெஷல்தானே?



வஸந்த் எனக்கு எப்போதும் பிடித்த டைரக்டர். "ரிதம்' அடிக்கடி நான் பார்க்கும் படம். அதன் கதையிலும், காட்சியிலும் ஒரு ஜீவன் இருந்துக் கொண்டே இருக்கும். வஸந்தை பார்க்கும் போதெல்லாம் ""அடுத்து எப்ப படம் பண்ணலாம்''ன்னு கேட்டுக் கொண்டே இருப்பேன்.


திடீரென ஒரு நாள் ""மூன்று பேர் மூன்று காதல்'. இதுதான் படத்தின் பெயர். படத்தில் உங்களுக்கும் ஒரு காதல் இருக்கு''ன்னு சொன்னார். காதல்தான் கதை. வஸந்த் சார் படத்துக்கு எப்போதுமே ஆடியன்ஸ் இருப்பாங்க. அந்த ஆடியன்ûஸ நிச்சயம் இந்தப் படம் திருப்திப்படுத்தும்.


சின்ன சின்ன ஹீரோக்களே ஒருவருடன் ஒருவர் சேர்ந்து நடிக்க தயங்குகிறார்கள். ரொம்பவே தைரியமாக அஜித்துடன் "மங்காத்தா' ஆடுனீங்களே?


எனக்கு எது பிடிக்குதோ அதை செய்வேன். இதை செய்யலாம் என என் மனசு சொன்னால் போதும், வேறு எதையும் பார்க்க மாட்டேன். ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பதற்கு அழுத்தமான கதைதான் வேண்டும். அதை திறமைûயாக கையாளுகிற டைரக்டர் வேண்டும்.


"மங்காத்தா'வில் அது செட் ஆனது. எனக்கு எந்த இகோவும் கிடையாது. அஜித்தும் அப்படித்தான். ரொம்பவே சாதாரணமாக அந்த சினிமாவில் நடித்தோம். ஆனால் தொடர்ந்து அது மாதிரியான சினிமாக்கள் இங்கே வரவில்லை என சொல்லும் போது ஏதோ குறை இருப்பதாகத்தான் தெரிகிறது.


பாலிவுட் சினிமாக்களில் ஹீரோக்கள் சேர்ந்து நிறைய படங்களில் நடிக்கிறார்கள். இங்கே அப்படி ஒருங்கிணைக்க நல்ல கதைகள் வேண்டும். கதை நன்றாக இருந்தால் நடிக்க எல்லோரும் முன் வருவார்கள். நிச்சயம் இது மாறும்.


30 வருஷ சினிமா வாழ்க்கை திருப்தியா இருக்கிறதா?


முதல் நாள் நேசித்த சினிமாவை இன்னும் அப்படியே நேசிக்கிறேன். சரி, தவறு என சராசரி மனிதர்களைப் போல் நானும் நிறையவே செய்திருக்கிறேன். நல்ல படம், கெட்ட படம் என எதையும் இனங் காணாமல் நடித்திருக்கிறேன். சில படங்களை இப்போது பார்க்கும் போது எனக்கே பிடிக்கலை. சில படங்களை டி.வி.யில் பார்த்தால் சேனலை மாற்றி விடுகிறேன்.


இல்லையென்றால் என் பொண்ணுங்களே என்னை கிண்டல் செய்கிறார்கள். ஒரு சில படங்களில் நல்லா நடித்திருக்கிறேன். அதற்கு இயக்குநர்கள்தான் காரணம். நான் இப்போதும் இயக்குநர்களின் நடிகன்தான். இதுவரைக்கும் எந்த நோயும் உடம்பில் இல்லை.


""இனியும் நெருங்காது''ன்னு சமீபத்தில் ஒரு டாக்டர் சொன்னார். அந்தளவுக்கு உடம்பை பார்த்துக் கொள்கிறேன். காரத்தே, உடற்பயிற்சி என சின்ன வயதில் இருந்தே ஆர்வம். அதையெல்லாம் இப்போதும் செய்து கொண்டு வருகிறேன்.



இத்தனை வருஷம் உடம்பை ஃபிட்டா வைத்திருப்பதற்கு காரணம் உணவு பழக்கம்தான். உடம்பை பேணிக் காத்தால் நல்ல தன்னம்பிக்கை கிடைக்கும். அது என்னிடம் நிறையவே இருக்கிறது.

No comments:

Post a Comment