Monday 10 December 2012

மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் அஜீத்!

Ajith again in murugadoss filmஅஜீத்தின் தீனா படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜீத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளார். காதல் டிராக்கில் போய் கொண்டு இருந்த நடிகர் அஜீத்தை, ஆக்ஷ்ன் டிராக்கில் களம் இறக்கிவிட்டர் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜீத்-முருகதாஸ் கூட்டணியில், கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த படம் தீனா. அதிரடி ஆக்ஷ்ன் படமாக வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தபடத்தின் மூலம் டைரக்டர் முருகதாஸ்க்கும், அஜீத்துக்கும் ஒரு பெரிய பெயர் கிடைத்தது. அதுமட்டுமல்லாது தீனா படத்திற்கு பிறகு தான் அஜீத்துக்கு தல என்ற அடைமொழியும் சேர்ந்தது.

இந்நிலையில் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கி, அதையும் வெற்றிபடமாக்கியுள்ள முருகதாஸ் மீண்டும் அஜீத்தை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் அஜீத்தோ விஷ்ணுவர்தன் படம், சிறுத்தை சிவா படம் என்று அடுத்தடுத்த படங்களில் நடிப்பதால் முருகதாஸ்க்கு ஓ.கே., சொல்ல முடியாமல் இருந்து வந்தார். இருந்தாலும் அஜீத்துக்காக தான் காத்திருப்பதாக முருகதாஸ் கூறியதை அடுத்து இப்போது அஜீத்தும், முருகதாஸ் படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருக்கிறாராம்.

தற்போது முருகாதஸ் அக்ஷ்ய் குமாரை வைத்து இந்தி துப்பாக்கியை ரீ-மேக் பண்ணும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதேபோல் அஜீத்தும் விஷ்ணுவர்தன் மற்றும் சிறுத்தை சிவா படங்களில் பிஸியாக இருப்பதால் இருவரும் அவரவர் படங்களை முடித்தபின்னர் தங்களது புதிய படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை ஐயங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்தாண்டு இவர்களது படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகும் என்றும், விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! டி.டி.எச்., குறித்து கமல் ஆதங்கம்!!


Kamal statement on Vishwaroopam DTH release விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,-ல் வெளியிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் கமல், திருடனுக்கு 50 சதவீதம் கூட கொடுப்பார்கள் ஆனால் உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள் என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் டி.டி.எச்., முயற்சியையும் புரிதல் இல்லாததால் புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம் என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம். ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம், இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி, தமிழ் சினிமாவை ஏன் உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளை கடக்க வைக்கும் முயற்சி என்று ‌என்னை பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. டி.டி.எச்-ற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஆனால் ஒரு சிலர் மட்டும் நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.

கிடைத்ததை சுருட்டும் பழக்கம் எனக்கில்லை

இந்த டி.டி.எச். என்பது என்ன எல்லோர் வீட்டிலும் இருக்கும் டி.வி. பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள், அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி. சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த டி.டி.எச்., இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதைவிடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததை சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சாட்சி.

இந்தி சினிமா வசூலுக்கு வழிவகுக்கும்

என்படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்க பலர் பெரிய விலைகளை சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்து சொல்லி கறுப்பு பண விளையாட்டை குறைத்து கொண்டால் 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

இந்தியாவில் அதிக விற்பனையான விஸ்வரூபம் ஆடியோ

ஒரேநாளில் விஸ்வரூபத்தின் இசை, இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு விஸ்வரூபம் வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?

தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய் கிடைக்காது

டி.டி.எச்-ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்யேகக் காட்சி முடியும் போது படம் டி.டி.எச். கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய் கிடைக்காது. விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது டி.வி-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

திருடனுக்கு கொடுப்பவர்கள் உடையவனுக்கு கொடுக்கமாட்டார்கள்

டி.டி.எச். வசதி தமிழக ஜனத்தொகையில் 3 சதவீதம் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் ஒன்றரை சதவீதம் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம். 7.5 கோடியில் ஒரு சதவீதம் படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50 சதவீதத்தை கள்ள டி.வி.டி., வியாபாரி கொண்டு போவ‌தை தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள டி.வி.டி-க் காரர்களுடன் கூட்டு சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டுவிட்டு நேர்மையான வியாபாரத்தை தடுப்பது கண்டிக்கத்தக்கது.

திருடனுக்கு 50 சதவீதத்தை கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம். இந்த வாதத்தால் தியேட்டரில் வியாபாரம் குறையாது. வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்கு போவதைக் குறைத்து கொண்டதாய் தெரியவில்லை. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று நினைத்து பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும், நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன..? பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ளவே ஒரு சின்ன விளக்கம்.

முஸ்லீம்களை தவறாக சித்தரிக்கவில்லை

முடிவாக இந்தப்படம் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சில முஸ்லிம் அமைப்புகள் சந்தேகப்படுகின்றனர். அவர்கள் இந்தப்படத்தை பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் வருந்தினால் மட்டும் போதாது, சகோதரனை சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லீம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அவ்வளவு பிரியா‌ணியையும் நான் ஒரு ஆளாக சாப்பிட முடியாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு கமல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் டி.டி.எச். ரிலீஸ்! கமலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு!!

Producer council supports kamal decision on releasing Vishwaroopam in DTH  விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் வெளியிடும் கமலின் புதிய திட்டத்திற்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. கமல் நடித்து, இயக்கி, ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பயங்கரவாதத்தை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாது ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப சிறப்பு அம்சங்களுடன் ஹாலிவுட் தரத்தில் இப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை கமல் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளார். அதற்கு முன்பாக தியேட்டரில் 8 மணி நேரத்திற்கு முன்பாக டி.டி.‌எச்.-ல் வீட்டிலேயே அனைவரும் பார்க்கும் விதமாக இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கமல் இப்படி செய்வதால் தியேட்டருக்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்துபோகும் என்றும் இதனால் நாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவோம் என்றும், இதனால் கமல் இம்முடிவை கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமலின் இந்த முடிவை வரவேற்பதாக தென்னிந்திய தயாரிப்பாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சம்மேளனத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் அனைவரும், கமலின் புதிய முயற்சியான டி.டி.எச்-ல் படத்தை வெளியிடும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் திரையரங்கு உரிமையாளர்களுடன் இன்னும் ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இப்பிரச்னைக்கு விரைவில் முடிவு ‌எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர் கேயார் கூறுகையில், கடந்தாண்டு 129 படங்கள் ரிலீசானது. இந்தாண்டு 148 படங்கள் ரிலீசாகி உள்ளது. இதில் 8 படங்கள் மட்டுமே ஹிட்டாகியுள்ளது. அப்படி ஹிட்டான படங்களும் கூட சிறு முதலீடு படங்கள் தான். இன்றைய சூழலில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட படங்கள் சென்சார் செய்யப்பட்டு தியேட்டர் கிடைக்காமலும், வருவாய் பிரச்னைகளாலும் ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அப்படி இருக்கையில் கமலின் இந்த முதிய முயற்சி வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் கமலுக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். நேரடியாக ஒருநாளில் படத்தை ரிலீஸ் செய்வதால், தியேட்டர் விநியோகம் பாதிக்காது என்று கூறியுள்ளார்.

பாரதிராஜா கூறும்போது, கமலை வைத்து 16 வயதி‌னிலே படத்தை எடுத்தபோது, அதில் அவரை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன். இந்தபடம் எல்லாம் நன்றாக ஓடப்போகிறதா என்று ஏளனம் செய்தார்கள். எப்பவும் சோதனைகளை சாத‌னைகளாக்கி அதில் வெற்றி பெறுபவர் கமல். கமலின் இந்த புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. இதனால் அனைவரும் பயன்பெறுவர். மேலும் இப்படியொரு முயற்சியால் ரசிகர்களை தியேட்டருக்கும் இழுத்து வர முடியும். பொதுவாக நான் இதுபோன்ற விஷயத்தில் தலையிடுவது இல்லை. ஒரு தயாரிப்பாளராக கமலின் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். ஆரம்பத்தில் எந்த ஒரு திட்டத்திற்கும் எதிர்ப்பு இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு தொலைநோக்கு பார்வையோடு இதனை பார்க்க வேண்டும். தியேட்டர் உரிமையாளர்களும் பெருந்தன்மையோடு கமலின் முடிவை ஆதரிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக மாநில அரசையும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிலிம் சேம்பர் உறுப்பினர் பிரசாத் கூறுகையில், நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக கமலின் முடிவை நாம் வரவேற்க வேண்டும். தயாரிப்பாளர்கள் அனைவரும் அவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டும். ஒருநாளில் ரிலீஸ் செய்வதால் தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

கும்கியைக் கண்டு பயப்படுகிறார் கெளதம்மேனன்!

Gautham menon fear of Kumkiவிண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப்பிறகு கெளதம்மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் தோல்வியடைந்து விட்டதால், அடுத்தபடியாக தான் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் பட விசயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறார் கெளதம். ஏற்கனவே ஜீவா நடித்த முகமூடி தோல்வியடைந்து அவரது மார்க்கெட்டும் சரிந்திருப்பதால், தான் இந்த படத்தை வெளியிடும் நேரத்தில் போட்டி ஏதும்இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் அவர். அதற்காக போட்டி இல்லாத களமாக டிசம்பர் 14-ம் தேதியை தேர்ந்தெடுத்திருந்தார்.

ஆனால் இப்போது பார்த்தால், நீதானே என் பொன்வசந்தம் படத்தை வெளியிட கெளதம்மேனன் முடிவெடுத்துள்ள அதே 14-ம் தேதியில் கும்கி படத்தையும் வெளியிடுகிறார்களாம். மைனா பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் என்பதோடு, இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகளும் இருப்பதால், எங்கு இந்த படத்தினால் தனது படம் தோற்று விடுமோ என்று பயப்படுகிறார் அவர். ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து விடலாமா? என்று யோசித்தாலும், கும்கிக்காக தான் பின்வாங்கினால், தனது படத்தை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்று பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் திக திக் மனநிலையுடன் இருந்து வருகிறார் கெளதம்.

பல்லை காட்டிய பவர்ஸ்டார்! டென்ஷன் ஆன ஷங்கர் - கண்ணா லட்டு தின்ன ஆசையா விழா காமெடி!!


Powet star speech: Shankar tensionகாமெடி நடிகர் சந்தானம் கதாநாயகராவும், தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைக்கும் படம் "கண்ணா லட்டு தின்ன ஆசையா". இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு வீழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் வெகு விமரிசையாக நடந்தது. படத்திலும் இவ்விழாவிலும் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஒரு நாயராக நடித்து இருக்கும் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசனை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கினார் சந்தானம். விழாவில் பேசிய சந்தானம், இப்படத்தை பற்றி சந்தானத்துடன் கூறியபோது அவர் கேட்ட முதல்கேள்வியே எப்போது படத்துக்கான விழா நடைபெறும் என்று தான். ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக அவர் என்னிடம், எனக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள், குறைந்தது 5000 இன்விடேஷனாவது வேண்டும் என்று கேட்டார். உடனே நான் மொத்தமே 500 இன்விடேஷன் தான் அடித்துள்ளேன் என்று சொல்லி அவருக்கு ஒரு 50 இன்விடேஷன்களை கொடுத்தேன். அவர் ஏன் அப்படி கேட்டார் என்று இப்போது தான் புரிந்தது. இங்கு விழாவுக்கு பவர் ஸ்டார் தன்னுடைய ரசிகர்களை லாரியில் வரவழைத்து அழைத்து வந்துள்ளார். அவருக்காக விழாவுக்கு வந்த அவரது ரசிகர்களுக்கு எனது நன்‌றியை தெரிவித்து கொள்கிறேன் என்று போட்டு தாக்கினார்.

இவ்விழாவில் பேசிய பவர்ஸ்டாரும், சந்தானத்திற்கு சற்றும் சளைத்தவர் இல்லாவதர் மாதிரி சந்தானம் முதல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வரை தனது ரசிகர்கள் என்று சொல்லி கலாய்த்தது அரங்கத்தையே அதிர செய்தது. ஆனால் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட்ட ஷங்கர், பவர்ஸ்டாரின் ‌பேச்சால் அப்செட்டாகி இருப்பார் போலும்...தனது ஐ படத்தில் பவர்ஸ்டாருக்கும் ஒரு பாத்திரம் கொடுத்து, தன்னையும் பவரின் ரசிகர் என்று சொல்லி பவர்ஸ்டாரின் புகைப்படமும் எடுத்துக் கொண்ட ஷங்கர் (தகவல் உபயம் பவர்ஸ்டார்) பவரின் இதுமாதிரி பேச்சால் அவரைப்பற்றி மேடையில் மறந்தும் மூச்சுவிடவில்லை ஷங்கர். இதில் வருத்தத்திற்குள்ளான பவரின் இரண்டு லாரி ரசிகர்கள் கூட்டம், பவர்ஸ்டாரை பற்றி பவர்ஸ்டாரை பற்றி பேசு... என்று கூச்சலிட்டும், அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் தனது இருக்கையில் போய் அமர்ந்தார் ஷங்கர்.

பவரின் காமெடி பேச்சு ஷங்கரின் "ஐ"-யிலிருந்து அவரை கழட்டி விடாது இருந்தால் சரி!

ஷாம் துணிச்சல்காரன் ! : சுதீப் சர்டிஃபிகேட்

ஷாம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருப்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் ' 6 '. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

படத்தின் இசையை சுதீப் வெளியிட, சினேகா, நமீதா, விமலா ராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். படத்தின் டிரெய்லரை அமீர் வெளியிட்டார். விழாவில் பரத், அப்பாஸ் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

அவ்விழாவில் சுதீப் " பொதுவாக ஆண்கள் தங்கள் தலைமுடியை சீரமைத்து, முகத்தை அழகாக்கிக் கொள்வதற்காக சலூன் போகிறார்கள். அது போல் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பார்லருக்கு செல்கிறார்கள்.

ஒரு நடிகருக்கு முகம் தான் மூலதனம். முகத்தைப் பார்த்துதான் நடிகர்களை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்கிறார்கள். நடிகர்களைப் பொருத்தவரை முகம் அழகாக இருக்க வேண்டும். அல்லது அபாரமான நடிப்பு திறமை இருக்க வேண்டும். கதாபாத்திரத்துக்காக தலைமுடியை தியாகம் செய்து, முகத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் ஷாமுக்கு இருக்கிறது. அதை இனிமேல் தான் அவர் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த படத்தின் விளம்பரம் மூலம் அவர் நிரூபித்து விட்டார்.

நான் இவ்விழாவிற்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. நான் நடித்த ' நான் ஈ ' படம் இங்கே நன்றாக ஓடியதற்காக வரவில்லை. ஷாம் மனிதநேயம் மிகுந்த மனிதன். அவரைப் போன்ற நல்ல உள்ளத்தை பார்க்க முடியாது என்பதற்காக வந்தேன்." என்று பேசினார்.

இயக்குனர் அமீரின் பிறந்த நாளையும், இசை வெளியீட்டு விழாவில் கொண்டாடினார்கள்.

லூட்டி தாங்க முடியல..!

சந்தானம், பவர் ஸ்டார் நடிப்பில் வெளிவர இருக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை நகைச்சுவை ரசிகர்கள் ஆசையோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை 'இன்று போய் நாளை வா' படத்தின் கதை தான் என்று பேச்சுகள் நிலவி வருகிறது. இதனை 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் இயக்குனர் மணிகண்டன் மறுத்து இருக்கிறார்.

இன்று போய் நாளை வா' படத்தினைப் போலவே இதிலும் ஒரே பெண்ணை காதலிக்கும் மூன்று ஆண்கள் என்பது தான் கதை. ஆனாலும், படத்தின் திரைக்கதை வேறு மாதிரி இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. ஷங்கர் வெளியிட சிம்பு பெற்றுக் கொள்கிறார்.

இப்படத்தின் முதல் பாதி வரை பார்த்த உதயநிதி ஸ்டாலின் " கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் முதல் பாதியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்தானம், சேது மற்றும் பவர் ஸ்டார் அடிக்கிற லூட்டி... தாங்க முடியல " என்று தெரிவித்து இருக்கிறார்.

அதுமட்டுமன்றி படத்தினை தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் வெளியிடலாம் என்று தீர்மானித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

தமிழில் காலூன்றும் யாஷ் ராஜ் பிலிம்ஸ்!

ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான இந்திப் படம் Band Baajaa Baaraat . இப்படத்தினை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்தது. பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவி வந்தது.

ஆனால் யாஷ் ராஜ் நிறுவனம், தங்களது நிறுவனமே தமிழ், தெலுங்கு பதிப்பினை தயாரிக்கும் என்று அறிவித்தது. தென்னிந்தியாவில் யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமாக இப்படம் அமைய இருக்கிறது.

முன்னர் ரன்வீர் சிங் வேடத்தில் நானி நடிப்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அத்தகவலை அவர் மறுத்தார்.

தற்போது யாஷ் ராஜ் நிறுவனமே படத்தை தயாரிப்பதால், நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டார்.

விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோகுல் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.