Saturday, 21 July 2012

தமிழ் சினிமாவின் ஓப்பனிங் வசூல் முறை சிவாஜி படத்திலிருந்து தொடங்கியதா?


      

இன்று ஒரு படத்தை, கதையும் திரைக்கதையும் தீர்மானிக்கிறதோ இல்லையோ "ஓப்பனிங் எனப்படும் வெளியீட்டு முறைதான் தீர்மானிக்கிறது. ஒரு படத்துக்கு ஓப்பனிங் இருக்கு..' அல்லது "ஓப்பனிங் இல்லை..' என்று கூறுகிறார்களே அப்படியென்றால் என்ன? ஒரு திரைப்படம் எந்த நாளில் ரிலீஸ் ஆகிறதோ, அன்றிலிருந்து முதலாவதாக வரும் ஞாயிற்றுக்கிழமை வரையான ஆரம்ப நாட்களின் வசூல்தான் ஓப்பனிங் வசூல் என்பதாகும்.

ஒரு திரைப்படம் திங்கட்கிழமை ரிலீஸ் ஆனாலும், சனிக்கிழமை ரிலீஸ் ஆனாலும் ஞாயிறு வரையான வசூல் அந்த முதல் வார ஓப்பனிங் வசூலாக எடுத்துக் கொள்ளப்படும்.

பொதுவாக, மிகப்பெரும்பாலான திரைப்படங்கள் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமைகளில்தான் வெளியிடப்படுகின்றன. பண்டிகை நாளாக இருந்தால் சனிக்கிழமைகளிலும் வெளியிடப்படும்.

ஒரு திரைப்படத்தின் வெற்றியை இன்று ஓப்பனிங்கை வைத்து கணிக்கின்ற அளவுக்கு சினிமா உலகம் மாறியிருக்கிறது. இந்த மாதிரியான ஒரு நடவடிக்கை ரஜினிகாந்த் நடித்த "சிவாஜி' படத்தில்தான் தொடங்கியது.

அதற்கு முன் வரை ஒரு திரைப்படத்தின் வெற்றியானது எவ்வளவு நாள் அந்தப் படம் ஓடியது என்பதை வைத்துதான் தீர்மானிக்கப்பட்டு வந்ததது. "சிவாஜி' படத்துக்குப் பிறகு ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானப்பதற்கு நாட்கள் தேவைப்படவில்லை. எத்தனை காட்சிகள், எத்தனை தியேட்டர்களில் ஓடியது என்பதும், அதன் மூலம் எவ்வளவு வருமானம் கொட்டியது என்பதும்தான் படத்தின் வெற்றியாக உருவானது.

ஆனால் சில படங்கள் இதற்கு நேர்மாறாக, வெளிவந்த போது சரியாக போகாமல் தோல்விப்படம் என முத்திரை குத்தப்பட்டு, நாட்கள் போகப்போக கூட்டம் அதிகமாகி வசூலை வாரிக்குவித்த வரலாறுகளும் உண்டு. மகேந்திரனின் "முள்ளும் மலரும்', பாலாவின் "சேது', மிஷ்கினின் "சித்திரம் பேசுதடி' என பட்டியல் நீளும்.

மக்களுக்குப் பிடித்துப்போனால் மாத்திரமே வாய்வழியாக சொல்லப்பட்டு, இரண்டாம் வாரம் கூட்டம் வரும் என்பது அன்றைய நிலை. இப்படி மக்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் 175 நாள், 200 நாள் என ஓடி ரசிகனையும், திரைப்படத் தொழில் சார்ந்தவர்களையும் மகிழ்வித்தது. சினிமா கலையாகவும், அதே நேரம் கலை சார்ந்த தொழிலாகவும் இருந்தது.

ஆனால், இன்று ரசிகனின் விருப்பம் முக்கியமில்லை. "இதுதான் படம் இதைப்பார்' என்ற நிலையில், இருக்கும் மொத்த திரையரங்கிலும் ஒரு குறிப்பிட்ட நாயகனின் படத்தைப் போட்டு, சில நேரம் சிறு படங்கள் நன்றாக இருந்தாலும் அதை தியேட்டரைவிட்டே எடுக்கும் நிலைக்கு ஆளாக்கி, தங்கள் படத்தை வெளியிட்டு முழுக்க முழுக்க லாபம் மட்டுமே குறிக்கோளான நிலைக்கு ஓப்பனிங் முறை வழிவகுக்கிறது.

இது திடீரென்று உருவாகிவிடவில்லை. 1990களின் இறுதியில் தமிழ் சினிமா ஒரு மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, அதுதான் திருட்டு வீசிடி என்னும் திரையுலக நோய்.

திரைப்படம் வெளிவந்த அடுத்த நாளே திருட்டு வீசிடி அற்புதமான பிரிண்டுகளாக வெளிவரத் தொடங்கியதும் மக்கள் திரையரங்கிற்குச் செல்வது குறைய ஆரம்பித்தது. 100லிருந்து 500 ரூபாய் வரையில் செலவு செய்து ஒருவர் திரையரங்கில் பார்ப்பதைவிட, 30 ரூபாயில் குடும்பமாக வீசிடியில் பார்த்து முடித்தார்கள்.

மேலும் படித்தவர்கள் மத்தியில் "இவர்களே வெளிநாட்டு படங்களை காப்பியடித்துதான் எடுக்கிறார்கள்... இவர்கள் படத்தை திருட்டுத்தனமாக பார்த்தால் என்ன?' என்கிற மனோநிலையும் உருவானது.

இதனால் திரையரங்கிற்கு வரும் மக்கள் தொகை திடீரென வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. முதல் பத்து, பதினைந்து நாட்களுக்கு படம் ஓடுவதே குதிரைக் கொம்பானது. திரையரங்குகள் காற்று வாங்க ஆரம்பித்தன. பெரிய வெற்றி பெற வேண்டிய படங்கள் சாராசரி வெற்றியைப் பெற்றன. சராசரி வெற்றி வெற்றிருக்க வேண்டிய படங்கள் தோல்வியடைந்தன. இதனால் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பலர் லாபம் பார்க்க சிரமப்பட்டார்கள். சிலர் நஷ்டமடைந்தார்கள்.

இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த "சிவாஜி" திரைப்படத்தின் உரிமையை ஏவிஎம் நிறுவனம் விற்க முடிவு செய்தது. சென்னை நகருக்கான உரிமையை "அபிராமி' ராமநாதன் கிட்டத்தட்ட 6.2 கோடிக்கு வாங்கினர். அதுவரை எந்த திரைப்படமும் இப்படி வாங்கப்படவில்லை. இப்படத்துக்கு முன் சென்னையில் அதிக வசூலை குவித்திருந்த "சந்திரமுகி' கூட தொடாத தொகை அது. ஆனால் ராமநாதன் பயப்படவில்லை. தான் போட்ட காசை எடுப்பதற்கு அவர் ஒரு புதிய திட்டத்தைக் கையாண்டார், அதுதான் அதிக திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடும் திட்டம்.

சென்னையில் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் அதிகபட்சம் 10 அல்லது 15 திரையங்குகளில்தான் அதுவரை வெளியப்பட்டு வந்தது. ஆனால், ராமநாதன் "சிவாஜி' படத்தைக் கிட்டத்தட்ட 30 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார், அத்துடன் இணையம் மூலமாகவும், நேரடியாகவும் முன்பதிவுகளை மேற்கொள்ளும் வசதியும் துணையிருக்க, முதல் 10 நாட்களுக்கான டிக்கட்டுகள் படம் வெளிவருவதற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டன. அதற்கு விளம்பரங்கள் பேருதவி செய்தன.

"சிவாஜி' முதல் நான்கு நாட்களில் ஓப்பனிங் வசூலாக மிகப்பெரும் தொகையான 1 கோடியே 34 இலட்சத்தை வசூலித்தது. மூன்றாம் வாரத்தில் போட்ட பணமான 6.2 கோடியை மீட்டெடுத்தது. கிட்டத்தட்ட மொத்தமாக சென்னையில் 12 கோடியை வசூலித்தது "சிவாஜி' படம்.

அதுபோல் ஐங்கரன் நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்து புதிய வர்த்தகப் பாதையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. இப்படியாக தமிழ் சினிமாவின் வர்த்தகம் "சிவாஜி'க்கு பின்னர் புதிய வடிவில் எழுச்சி பெற ஆரம்பித்தது.

சிவாஜிக்கு அடுத்து அதே ஆண்டு மிகப்பெரும் வசூலை குவித்த திரைப்படம் "பில்லா'. சென்னையில் அதன் ஆரம்ப வசூல் மூன்று நாட்களில் 59 இலட்சம். மொத்தமாக "பில்லா' சென்னையில் கிட்டத்தட்ட 4.5 கோடி வரை வசூலித்தது. அன்றைய தேதியில் இது மிகச்சிறந்த வசூலாக கருதப்பட்டது.

"சிவாஜி'க்கு பின்னர் கமலின் "தசாவதாரம்' திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டு சிறப்பான வசூலை குவித்தது. சென்னையில் ஓப்பனிங்காக மூன்று நாட்களில் 95 இலட்சம் வசூலித்த "தசாவதாரம்', மொத்தமாக கிட்டத்தட்ட 11 கோடியை வசூலித்தது. வெளிநாடுகளிலும் அதிக திரைகளில் வெளியிடப்பட்டு கணிசமான வசூலை பெற்றது. இது போன்ற சூழலில்தான் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், "தமிழ் சினிமாவில் "தசாவதாரம்' திரைப்படம் உலகாளவிய சந்தையைத் தொடங்கியிருக்கிறது. நல்ல மார்க்கெட் இருக்கிறது' என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, முன்னணி நடிகர்களது திரைப்படங்கள் தொடர்ந்து அதிகமான திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்தது. ஓப்பனிங் என்பது புதிய பரிமாணம் பெற்றது.

அஜித்தின் "மங்காத்தா' ஐந்து நாட்களில் 1 கோடி 80 இலட்சம் வரை வசூலித்தது. மொத்தமாக 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. ரஜினி, கமலுக்கு அடுத்து சென்னையில் 8 கோடியை தொட்ட நடிகர் என்கின்ற பெருமையை அஜித் பெற்றார்.

சூர்யாவின் "7 ஆம் அறிவு' திரைப்படம் ஓப்பனிங்காக ஐந்து நாட்களில் 2 கோடி 20 இலட்சத்தையும், விஜய்யின் "வேலாயுதம்' ஐந்து நாட்களில் 1 கோடி 95 இலட்சத்தையும் வசூலித்தன. "வேலாயுதம்' சென்னையில் 8 கோடி கடந்த முதல் விஜய் படமாகவும் "7 ஆம் அறிவு' ரஜினி, கமலுக்கு அடுத்து 9 கோடியைக் கடந்த நடிகராக சூர்யாவிற்கும் பெருமையைத் தேடிக் கொடுத்தன.

ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் மூன்று வாரங்களுக்குள் லாபம் பார்த்துவிடுகின்றார்கள், ஐந்து வாரம் சிறப்பாக ஓடினால் அப்படம் மிகப்பெரும் வெற்றியை பெறுகின்றதாக் கருதப்படுகிறது. முன்னர் 200 நாட்கள் ஓடி பெறப்பட்ட வசூலை இப்போது 20 நாட்களுக்குள் பெற்று விடுகின்றார்கள். அன்று பத்து தியேட்டர்களில் நூறு நாள்.. இன்று நூறு தியேட்டரில் பத்து நாள்.. இதுதான் ஓப்பனிங்கின் மாபெரும் சூட்சுமம்.

2007ம் ஆண்டு ஹிட்டான "பில்லா'வின் முதல் நான்கு நாள் வசூலை, இன்று "ஒரு கல் ஒரு கண்ணாடி' ஒரே நாளில் பெறுகின்றதென்றால், இந்த மாற்றம் ஓப்பனிங் என்னும் குறுக்குவழி மாற்றத்தால் நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள வெகு நேரம் ஆகாது. அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட நாளில் வேறு எந்தப்படமும் வராமல் பார்த்துக்கொண்டு வெளியிடுவது இதிலிருக்கும் மிகப்பெரிய விஷயம். அதாவது ஒரே ஒருவர் மட்டும் தேர்வு எழுதி, மிகப்பெரும் வெற்றி!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் சிறந்த ஓப்பனிங் யாருக்கு? ஒரு திரைப்படத்தின் ஓப்பனிங்கில் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், நடிகர்களால் மட்டும் மிகச்சிறந்த ஒப்பனிங்கை கொடுக்க முடியாது. நடிகர்களையும் தாண்டி ஒரு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புத்தான் ஓப்பனிங்கை தீர்மானிக்கிறது. அதோடு எதிர்பார்ப்பு என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு நடிகரும், குறிப்பிட்ட ஒரு இயக்குநரும் சேரும்போது அதிகமாக ஏற்படுகிறது,

இயக்குநரும் இசையமைப்பாளரும் இணையும்போது கூட எதிர்பார்ப்புகள் அதிகரித்த சந்தர்ப்பங்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றன. வெற்றிபெற்ற கூட்டணி என்பது ஒரு காரணம். இதையெல்லாம் தாண்டி படத்தை எடுக்க ஆன செலவை விட, விளம்பரச் செலவு அதிகம் செய்யவேண்டும். அப்போதுதான் ஓப்பனிங் என்பதே முழு அர்த்தம் பெறும்.

திரைப்படத்தின் எதிர்பார்ப்பு தவிர்த்து திரைப்படம் வெளியாகும் காலப்பகுதி, திரையரங்குகளின் எண்ணிக்கை போன்றவையும் ஒரு திரைப்படத்தின் ஓப்பனிங்கில் முக்கியத்துவம் செலுத்தும் முக்கிய காரணிகள். பெரிய திரைப்படங்களைப் பொறுத்தவரை எத்தனை திரையரங்குகளில் வெளியிடப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிக ஒப்பனிங்கை பெறமுடியும். இது தயாரிப்பாளர், வினியோகிஸ்தர் கைகளில்தான் இருக்கிறது. படத்தின் எதிர்பார்ப்பை பொறுத்தே திரையரங்கங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டாலும், பண்டிகை காலங்களில் பல திரைப்படங்கள் வருவதால் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில்லை. அதிகமான மற்றும் சிறந்த திரையரங்கை பெற்றுக்கொள்ளும் புத்திசாலி விநியோகிஸ்தர் அதிக ஓப்பனிங்கை பெறுகிறார்கள்.

தற்போதைய தமிழ் சினிமா நிலவரப்படி ரஜினி, கமல், அஜித், விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, கார்த்தி, இவர்களும் அடுத்து விஷால், ஜீவா, ஆர்யா போன்றோரும் கணிசமான ஓப்பனிங்கை பெறும் நடிகர்களாக இருக்கிறார்கள். நடிகர்களைத் தாண்டியும் ஒரு சில திரைப்படங்களுக்கு ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. வடிவேலுவின் "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்', ராஜேஷ், சந்தானம் எதிர்பார்ப்பில் வெளிவந்த "ஒரு கல் ஒரு கண்ணாடி" இப்படி அமைந்தவை. "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' முதல் மூன்று நாட்களில் சென்னையில் 40 இலட்சங்கள் வரை வசூலித்தது. இது அன்றைய தேதியில் விஜய், சூர்யா திரைப்படங்களும் வசூலிக்காத ஓப்பனிங் தொகை. அதற்குக் காரணம் "இம்சை அரசன் 23ம் புலிகேசி' திரைப்படத்தின் வெற்றியால் வடிவேலுவுக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்புதான்.

இன்று "ஒரு கல் ஒரு கண்ணாடி' யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு முதல் மூன்று நாட்களில் சென்னையில் 1 கோடி 73 இலட்சம் வரை வசூலித்திருக்கின்றது. இது ஒரு மிகபெரும் தொகை. அஜித், விஜய், சூர்யா போன்ற மிக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களது திரைப்படங்களின் வசூலை அறிமுக நாயகன் உதயநிதியின் திரைப்படம் எப்படி கடந்து சென்றது? இதற்கு உதயநிதி மட்டும் காரணமல்ல என்பது உதயநிதிக்கும் தெரியும். அப்படியென்றால் இந்த ஓப்பனிங் யாருக்கு? சந்தானத்திற்கா? இல்லை இயக்குநர் ராஜேஷுக்கா? இருவரும் ஒன்றாக சேர்ந்த கூட்டணிக்குத்தான் இந்த ஓப்பனிங் கிடைத்தது.

சந்தானம் இல்லாமல் ராஜேஷ் ஒரு படத்தை இயக்கினாலோ, ராஜேஷ் இல்லாமல் சந்தானம் வேறு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தாலோ இந்த ஓப்பனிங் நிச்சயமாக கிடைக்க வாய்ப்பே இல்லை. அதுமட்டுமல்ல அந்த நேரத்தில் ரசிகனுக்கு வேறு எந்தப் படத்தையும் கண்ணில் காட்டாதது விநியோகஸ்தர்களின் தனித்திறமை.

ஒரு நாயகன்தான் ஓப்பனிங்கின் காரணகர்த்தா என்றுகூற முடியாது. ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங் உதயநிதிக்குத்தான் என்றால், இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆனால் ஓப்பனிங் அதை செய்திருக்கிறது. ஓப்பனிங் என்பது ஹீரோவைவிட அந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பில்தான் எப்போதும் இருக்கிறது. ஓப்பனிங் என்பது ஒரு மாய மான்... யாருக்கும் பிடிபடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஓப்பனிங்: யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

ஓரு தயாரிப்பாளருக்கோ, திரையரங்க உரிமையாளருக்கோ ஓப்பனிங் லாபமாக இருக்க முடியும்.

என்னதான் பிரபல நடிகராக இருந்தாலும், அதிகமாக விளம்பரம் தேவைப்படும். பல நேரங்களில் ஒரு படத்தின் செலவை விட, அப்படத்தின் ஓப்பனிங்கை கூட்ட விளம்பரச் செலவு அதிகமாக ஆகும்.

சிறு மற்றும் நல்ல படங்களுக்கு திரையரங்கம் கிடைக்க வாய்ப்புகள் மறுக்கப்படலாம். இதனால் ஒரு தரமான படம் ஓடாமலும் போக வாய்ப்புண்டு. அல்லது ஓடும் படமும் திரையில் இருந்து மிரட்டி எடுக்கப்படவும் வாய்ப்புண்டு.

சினிமா என்பது கலையில் இருந்து, அல்லது யதார்த்த வாழ்க்கையில் இருந்து விலகி வியாபாரம், லாபம் என்று ஆகும். நல்ல கதையோ, சிறப்பம்சமோ இல்லாமல்கூட படம் பண்ணலாம் என்ற நிலை உருவாகும். ரசிகன் "இதுதான் படம்... இதைத்தான் நீ பார்த்ததாக வேண்டும்' என்று மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறான்.

கலை நசுக்கப்பட்டு, அந்த இடத்தில் வியாபாரம் வேர்விட்டு விரிந்து வியாபிக்கிறது.

No comments:

Post a Comment