Thursday 26 July 2012

சர்வதேச ரசிகர்களுக்காக மகாபாரதம் படம் எடுப்பேன். நான் ஈ இயக்குனர் ராஜமெளலி


ஸ்.எஸ்.ராஜமௌலி... தென்னிந்தியாவையே 'ஈஈஈஈஈ...’ என ரீங்கரிக்கவைத்தவர். 'இயக்கிய ஒன்பது படங்களும் ஹிட்’ என்ற அசாதாரணச் சாதனைக்குச் சொந்தக்காரர். 'ஒரு பேட்டி வேண்டுமே?’ என்று மெசேஜ் அனுப்பினால், 'மாலை ஆறு மணிக்கு ஃப்ரீயா? நானே அழைக்கிறேன்!’ என்று பதில் அனுப்பியவர், சரியாக ஆறு மணிக்கு அழைக்கவும் செய்தார்.
 ''நீங்கள் இயக்கிய ஒன்பது படங்களும் ஹிட். அந்த சக்சஸ் ஃபார்முலா என்ன?''
''அப்படிலாம் எந்த ஃபார்முலாவும் இல்லை. ஒவ்வொரு படம் பண்ணும்போதும், 'இது நல்லபடியா ஓடுமா?’னு டென்ஷன் படபடக்கும். ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ முடிஞ்சு ரசிகர்கள் பல்ஸ் ரிசல்ட் தெரிஞ்ச தும்தான் நிம்மதியா இருக்கும். உண்மையில் எந்த சினிமா ஜெயிக்கும்னு இங்கே யாருக்குமே தெரியாது. எனக்கும் தெரியாது. என்னை நம்பி தயாரிப்பாளர் பணம் போடுறார். அவருக்கு என்னோட உச்சபட்ச உழைப்பைக் கொடுக்கணும். அது மட்டும்தான் எனக்குத் தெரியும். படம் கமிட் ஆகிட்டா, தூங்கி எந்திரிச்சதுல இருந்து, தூங்கப் போற வரைக்கும் மனசு, உடம்பு எல்லாத்தையும் உழைப்புக்குக் கொடுத்திருவேன். அவ்வளவுதான்!''

''உங்க வொர்க்கிங் ஸ்டைல் என்ன?''
''எனக்குப் பிடிக்கிறவரை வேலை பார்ப்பேன். என் மூணாவது படம் 'சை’ (sஹ்மீ). ரக்ஃபி விளையாட்டை மையமாவெச்சு எடுத்த படம். எனக்கு ஒரு கொள்கை உண்டு. ஒரு படத்துக்கு எவ்வளவும் செலவு செய்யலாம். ஆனா, அது அந்தப் படத்தோட பிசினஸுக்குள் இருக்கணும்னு. அந்தப் படத்துக்காக நான் ஷூட் பண்ண ஒரு சீன் எனக்கே பிடிக்கலை. திரும்ப ஷூட் பண்ணா, பட்ஜெட் பிசினஸைத் தாண்டிடும். அதுக்காக அப்படியே அந்த சீனை வைக்கவும் மனசு இல்லை. என்ன பண்றது? தயாரிப்பாளர்கிட்ட போய், '25 லட்ச ரூபாய் கொடுங்க. அந்த சீனைத் திரும்ப எடுத்துடுறேன். அந்தப் பணத்தை என் சம்பளத்துல கழிச்சுக்கோங்க’னு சொன்னேன். அவர், 'உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும், அந்தப் பணத்தைக் கடனா தர்றேன். படம் ரிலீஸாகி நான் போட்ட பணத்தைவிட அதிகமா லாபம் எடுத்துச்சுன்னா, அந்த 25 லட்சம் ரூபாயை நான் கழிக்க மாட்டேன். அதை உங்க சம்பளமா கொடுப்பேன்’னு சொன்னார். படம் ரிலீஸாகி மூணாவது நாள் எனக்கு அவர் பேசுன சம்பளத்துல ஒரு பைசா குறைக்காம கொடுத்துட்டார். வொர்க்கிங் ஸ்டைல்னு என்ன... வேலை பார்த்துட்டே இருப்பேன்... வேற எதுவும் தெரியாது.''
''உங்க ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஸ்டைல். இது தானா அமைஞ்சதா... இல்லை அதுக்காகக் கதை தேடுவீங்களா?''
''வித்தியாசமாத்தான் இருக்கணும்னு யோசிக்கிறது இல்லை. நிறைய விஷயங்கள் பேசுவோம். 'அட... இது நல்லா இருக்கே’னு யோசிக்கவெச்சா, அதுதான் என் அடுத்த கதை. அதே மாதிரி ஏற்கெனவே படங்கள் வந்திருந் தாலும் நான் கவலைப்பட மாட்டேன். புத்தம் புதுசா ஒரு லைன் இருந்தாலும், எனக்குப் பிடிக்கலைன்னா அதைத் தொட மாட்டேன். நான் பண்ணின 'சிம்ஹாத்ரி’ (தமிழில் 'கஜேந்திரா’), 'சத்ரபதி’, 'விக்ரமார்குடு’ (தமிழில் 'சிறுத்தை’) இந்த மூணும் கிட்டத்தட்ட ஒரே கதைதான். ஆனா, பிரசன்ட் பண்ண விதம் வேற. ஒரு படம் சத்யம் தியேட்டர்ல உக்காந்து பார்க்குறவங் களுக்கும் பிடிக்கணும். கிராமத்து டாக்கீஸ்ல ரெண்டு மாசமோ, ரெண்டு வருஷமோ கழிச்சு ரிலீஸ் ஆகுறப்பபார்க்குறவங்களுக்கும் பிடிக்கணும். அப்படித்தான் என் ஒவ்வொரு படமும் இருக்கணும்னு ஆசை.''
''உங்க படங்களை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தினு ரீமேக் பண்றாங்க. அதை நீங்களே பண்ணிடலாமே?''
''ரீமேக் ரொம்ப போருங்க. சுடச் சுடச் சாப்பிடுற மாதிரி வராது. ஒரு கதையைப் பிடிச்சதும் அடிச்சுப் பிடிச்சு வேலை பார்க்கிற எக்ஸைட்மென்ட் ரீமேக்ல வராது. அதனால, நான் ரீமேக் பண்றது இல்லை. நல்ல படங்களைப் பார்த்தா, ரொம்ப சந்தோஷப்படுவேன். ரீமேக் பண்ண ஆசைப்பட மாட்டேன். என் சாப்பாட்டை நானே சமைச்சு, நானே பரிமாறணும்.''
''இந்திக்கு உங்களைக் கூப்பிட்டுட்டே இருக்காங்க. ஆனா, ஆந்திரத்தைவிட்டு கிளம்ப மாட்டேங்குறீங்களே?''
''வேணாம். இதுவே வசதியா இருக்கு. தமிழ், தெலுங்கு ரெண்டு ஃபீல்டுமே ஒண்ணுதான். ரசிகர்கள் ரசனை கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். அதனாலதான் 'நான் ஈ’ தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் ஹிட் ஆச்சு. இந்தி ஃபீல்டு வேற. எனக்கு அது செட் ஆகுமானு தெரியலை. இன்னொரு விஷயம்... கைல இருக்கிற வேலைகளை முடிக்கவே நாலு வருஷம் ஆகும். அப்புறம் பார்த்துக்கலாம்.''
''உங்க கனவுப் படம் என்ன?''
''மகாபாரதத்தைப் பிரமாண்டமா எடுக்கணும். அதுக்கு நிறைய அனுபவம் வேணும். அதைத் தேடித்தான் இப்போ ஒவ்வொரு படத்திலும் உழைச்சுட்டு இருக்கேன். எப்படியும் அடுத்த பத்து வருஷத்துக்குள்ள அந்தப் படத்தை எடுத்திருவேன். ஒண்ணு மட்டும் நிச்சயம்... அந்தப் படமும் நிச்சயமா சூப்பர் ஹிட் ஆகும்; மிஸ் ஆகாது.''
''மகாபாரதக் கதை உலகத்துக்கே தெரியுமே. அதை மாத்தவும் முடியாது. அதுல எப்படி ஸ்கோர் பண்ணுவீங்க?''
''டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்ல பூனை எலியை விரட்டும். எலி கடைசியில் தப்பிச்சிரும். இதுவும்தான் உலகத்துக்கே தெரியும். ஆனா, அதை உட்காந்து கை தட்டி ரசிச்சுப் பார்க்கிறோமே? அதே மேஜிக் மகாபாரதக் கதையிலும் உண்டு.  
ஸ்கூல்ல எத்தனையோ தடவை மகாபாரதக் கதை படிச்சிருப்போம். ஆனா, தூர்தர்ஷன்ல 'மகாபாரதம்’ தொடரைப் பார்த்தப்போ, டி.வி-யையே கோயில் மாதிரி நினைச்சு உட்கார்ந்து பார்த்தோமே? அந்த அளவுக்கு அதுல ஒரு பவர்ப்ளே இருக்கு. நான் எடுக்க ஐடியா பண்ற மகாபாரதம் இந்தியர்களுக்கு இல்லை. அது சர்வதேச சினிமா ரசிகர்களுக்கு.''
''உங்க மனைவி ரமாதான் உங்களுக்குப்  பலம்னு சொல்லியிருக்கீங்களே?''
''அவங்க இல்லைன்னா நான் இல்லை. சினிமா ஒன்பது டு ஆறு மணி வேலை இல்லை. ஷூட்டிங்ல இருக்கும்போது, வீட்டுல உள்ள பிரச்னைகள் எதுவும் மனசுல ஏறாது. அதை மனைவி புரிஞ்சுக்கலைன்னா, வாழ்க்கை நரகம்தான். எனக்கு வீட்டைப் பத்தி எதுவுமே தெரியாது. என் குழந்தைங்க ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவுனுகூடத் தெரியாது. அவங்க அதெல்லாம் பார்த்துக்கிட்டு, என் சினிமா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வாங்க. இந்த விஷயத்துல நான் ரொம்பக் கொடுத்துவெச்சவன்.''
''தமிழ்ல பிடிச்ச ஹீரோ யார்?''
''வேற யார்? ரஜினி சார்தான். எனக்கு அவரை ஒரு ரசிகனா சந்திக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ஒரு நிகழ்ச்சியில அவரைப் பார்த்தேன். பேசலாம்னு நினைச்சப்ப, அவரைச் சுத்திக் கூட்டம் கூடிருச்சு. தயங்கிப் பின்வாங்கிட்டேன். 'மஹதீரா’ பார்த்துட்டு என்னை போன்ல கூப்பிட்டார். 'ஃபென்டாஸ்டிக் வொர்க் ராஜமௌலி’னு பாராட்டினார். 'நான் ஈ’ பார்த்துட்டு, 'நீங்க வானத்தைத் தொட்டுட்டீங்க’னு தட்டிக்கொடுத்தார். நான் பார்த்துப் பார்த்து சிலாகிக்கிற ஒரு ஆர்ட்டிஸ்ட். அவர் பாராட்டினதுல எனக்குத் தலைகால் புரியலை. இன்னும் வானத்துல மிதந்துட்டுதான் இருக்கேன்.''
''அடுத்த படம்...?''
''அதான் சொன்னேனே... வானத்துல மிதந்துட்டு இருக்கேன்னு. இந்த சந்தோஷத்தைக் கொஞ்ச நாள் அனுபவிச்சுக்கிறேன். தரையில் கால் பட்டதும் அடுத்த கதையை... அடுத்த பயணத்தை ஆரம்பிச்சிட வேண்டி யதுதான்!''

No comments:

Post a Comment