Thursday 26 July 2012

கடனை திருப்பிக் கொடுக்காமல் ஓடி ஒளிகின்றேன். படவிழாவில் ரஜினிகாந்த் பேச்சு.




        சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு ‘கும்கி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபுசாலமன் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.
நடிகர் கமலஹாசன் விழாவில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டார். நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் படவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். டாக்டர்களும் விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வரஇயலாது என்றுதான் கூறினேன். இயக்குனர் பிரபுசாலமன் எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்து விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும் என்றார். சிவாஜி வீட்டு விழா என்பதால் நான் வந்து விட்டேன்.
சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார். குணமானதும் கமல் வந்துபோன விஷயத்தை எனது மகள்கள் தெரிவித்தனர். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.
ஹாலிவுட் படத்தில் நடிக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார். ரசிகர்கள் பற்றி நான் எதுவும் பேசுவது இல்லை. காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போல் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாத கடன்காரனை போல் ஓடி ஒளிகிறேன்.
இளைய தலைமுறை நடிகர்கள் வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இவ்வாறு ரஜினி பேசினார்.
விழாவில நடிகர் பிரபு, ராம்குமார், இயக்குனர்கள் லிங்குசாமி, பிரபுசாலமன், சரவணன், கவுரவ், தம்பி ராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment