Thursday 5 July 2012

ஒவ்வொரு படத்திலும் கற்றுக்கொள்கிறேன்! - எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்




பதிமூன்று மொழிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராகப் பணியாற்றியிருப்பவர். சாதாரண விருதுகள் முதல் சர்வதேச விருதுகள் வரை இவரைத்தேடி தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினை எட்டு முறை பெற்றிருப்பதன் மூலம், இந்திய அளவில் அதிக தேசிய விருதுகள் பெற்ற ஒரே திரைக்கலைஞர் என்ற பெருமைக்குரியவர். அவரைச் சந்தித்தபோது...

உங்களைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு...

எனக்கு ஆந்திரா பூர்விகம் என்றாலும் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., இலக்கியம் படித்தேன். அப்பா சஞ்சீவி சினிமா எடிட்டர் என்பதால் விடுமுறை நாட்களில் அப்பாவோடு எடிட்டிங் ரூமுக்கு போவேன். அப்போது எடிட்டிங் மேல் ஆர்வம் எற்பட்டது. அங்கிருந்து நான் வேற எங்கேயும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. மெதுமெதுவாக எடிட்டிங் கற்றுக்கொண்டு அத்துறையிலேயே பணியாற்றத் தொடங்கினேன்.

நீங்கள் எடிட்டராக பணியாற்றிய முதல் படம் எது? உங்களுக்கு சிறந்த எடிட்டருக்கான முதல் தேசிய விருது எந்தப் படத்துக்குக் கிடைத்தது?
இரண்டும் ஒரே படம்தான். "ராக்' என்கிற ஹிந்திப் படம். 1988ல் வெளிவந்தது.

ல்வேறு மொழிகள், பல்வேறு ஆளுமைகளுடன் பணியாற்றியுள்ளீர்கள் நிறைய சமரசம் செய்து கொண்டிருப்பீர்களே?

இந்தியா முழுக்க சினிமாவின் மொழியோ அல்லது கலாசாரமோ பொதுவானதாகத்தான் இருக்கிறது. மற்றபடி நாம் பேசுகிற மொழிதான் பிரச்னை. எனக்கு தாய்மொழி தெலுங்கு, தமிழ்நாட்டில் வளர்ந்ததால் தமிழ் தெரியும். ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் தெரியும் என்பதால் பிரச்னை ஏற்படவில்லை.

இந்திய சினிமாவில் உடை, விழா, உணவு இப்படி சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சென்டிமெண்ட் பொது. அப்பா - மகன், அண்ணன் - தங்கை இப்படி உறவுகளுக்குள்ளான சென்டிமெண்ட் எல்லா மொழியிலும், எந்த ஆளுமை எடுத்தாலும் பொதுவாகத்தான் இருக்கும். எனவே இதில் நான் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று பார்ப்பேன். என்னுடைய அதிர்ஷ்டம் கற்றுக்கொள்வது சமரசமாக அமையவில்லை.

பொதுவாக படத்தொகுப்பை பொறுத்தவரையில், சில விஷயங்கள் இருக்கின்றன. கதையை எப்படி கோர்வையாகச் சொல்வது, பார்வையாளனை எப்படிக் கவர்வது என்பது மிக முக்கியம். பல காட்சிகள், பல விதமாக எடுக்கப்படுகின்றன. அதை எப்படி வைத்தால் நன்றாக இருக்கும், இதற்கு எப்படி இன்னும் மெருகூட்டலாம் என்றெல்லாம் முடிவு செய்கிற அளவுகோலாக ஒரு படத்தொகுப்பாளர் இருக்கவேண்டும். இதில் சமரசத்திற்கு இடமே கிடையாது.

தொழில் நுட்பம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு எடிட்டர் கற்றுக்கொண்டே இருக்கவேண்டுமா?

கண்டிப்பாக. ஒரு ஆசிரியர் எப்படி மாணவன் போல் கற்றுக்கொண்டிருக்க வேண்டுமோ அதுபோல்தான் இதுவும். எத்தனை படத்தை வெட்டி ஒட்டியிருந்தாலும், ஒரு புதிய படம் எடிட்டருக்கு நிறைய கற்றுக்கொடுக்க காத்துக்கொண்டிருக்கும். ஒரே மாதிரி எந்தக் கதையும் இருக்காது. எனவே அதற்கு ஏற்றாற் போல் நாம் புதுமையாகச் செய்ய வேண்டும்.

அதே போல தொழில் நுட்பம் என்பது புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது. தற்போது டிஜிட்டல் சினிமா வந்திருக்கிறது. புதிதாக வரும் தொழில் நுட்பத்தை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதை ஏற்றுக்கொண்டு, கற்றுக்கொண்டு சிறப்பாக செய்யவேண்டும். "இது எனக்கு கஷ்டமாக இருக்கிறது.. இது தேவையில்லையே..' என்று சொன்னால் நாம் இருக்கிற இடத்திலேயே இருக்கவேண்டியதுதான்.

டிஜிட்டல் சினிமா சரியானதல்ல என்று பல முன்னணி ஒளிப்பதிவாளர்களே சொல்கிறார்களே?

புதுசாக வரும் எதிலும் சில குறைபாடுகள் இருக்கலாம். அதற்காக அது சரியில்லை என்று சொல்லமுடியாது. இரண்டு, மூன்று வருடத்துக்கு முன்பு இருந்த டிஜிட்டலை விட இப்போது தரம் கூடியிருக்கிறது. ஒரு புது குழந்தை வளர்வதைப்போல அது வளர்ந்து வருகிறது. இன்று சினிமா டிஜிட்டலிலேயே எடுத்து, டிஜிட்டலிலேயே வெளியிடப்படுகிறது. அப்படியிருக்க அதை சரியானதல்ல என்று எப்படி ஒதுக்க முடியும்? மிகவும் சிறப்பாக வர கொஞ்சம் நாளாகலாம். ஆனால் அதுதான் கடைசியில் நிற்கும்.

ஒரு திரைக்கதைதானே படம்.. அப்படியிருக்க நீங்கள் உங்கள் எடிட்டிங் வழியே கதை சொல்ல முடியுமா?
நிச்சயமாக. நிறைய படங்களில் இதுபோல் நடந்திருக்கிறது. பேப்பரில் இருக்கும் ஒரு கதை படிக்கும் போது நன்றாக, கோர்வையாக இருக்கும். சில நேரங்களில் ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்வதற்கு இயக்குநர் அந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ஆனால் அது படமாக எடுக்கப்பட்ட பிறகு திரும்பத் திரும்ப வந்தது போல் இருக்கும். சுவாரஸ்யம் இருக்காது. அந்த மாதிரி இடங்களில் ஒரு எடிட்டர்தான் படத்தின் கோர்வைதன்மையைக் கொண்டுவர முடியும். அப்போது திரைக்கதையே மொத்தமாக மாறும்.

திரைக்கதையில் மாற்றம் செய்யப்படாத ஒரு கதை எடிட்டரால் மாற்றம் செய்யப்படும். அந்த நேரத்தில் நாம்தானே கதை சொல்கிறோம்?

எல்லாப் படங்களையுமே நேர்த்தியான படத்தொகுப்பால் மிளிரவைக்கும் ரகசியம்?

நான் எடிட்டிங் செய்ய ஒத்துக்கொள்ளும் ஒவ்வொரு படத்தையும் ஆர்வத்தோடு செய்வேன். எத்தனை படம் பண்ணினாலும் இது புது படமாச்சே என்று எண்ணிதான் பண்ணுவேன். அதே போல ஒரே மாதிரியான படங்களை நான் செய்யறதே இல்லை. வேறு வேறு மாதிரி செய்கிறேன்.

ஒரு படம் காதல் படம் என்றால் அடுத்தபடம் ஆக்ஷன். அடுத்து ஒரு சென்டிமெண்ட் என்று மாற்றிக்கொள்கிறேன். குறும்படம் செய்கிறேன். குறும்படஙகளில் நல்ல சவால் இருக்கும். அதே போல் பெரிய பேனர், பெரிய நடிகர், பெரிய இயக்குநர் படங்கள் பண்ணும் போது அது ஜாலியாக இருக்கும். எப்படி இருந்தாலும் நம்முடைய பணியில் நாம் ஆர்வத்துடன் செய்தால் அது நிச்சயம் நன்றாக இருக்கும்.

சின்ன படம்.. பெரிய படம் என்பதைப் பொறுத்து எடிட்டிங் அமையுமா?

அப்படி பண்ண முடியாது. ஒரு படத்தை எடிட்டிங் செய்யும் போது அதைப் பார்வையாளனுக்கு எப்படிச் சிறப்பாக கொடுக்க முடியும் என்றுதான் பார்ப்போம். அதோடு அந்தப் படத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள் அதாவது, எந்த மாதிரி தொழில்நுட்பத்தில் எடுத்திருக்கிறார்கள். அதற்கேற்றார் போல் நம்முடைய எடிட்டிங் அமையும். என்ன பெஸ்டாக கொடுக்க முடியுமோ அதைத் தருகிறோம். மற்றபடி சின்ன படம் பெரிய படம் என்று நான் பார்ப்பதில்லை.

தமிழ்ப் படங்கள் பற்றி.. அதன் இயக்குநர்கள் பற்றி?

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக உணர்கிறேன். கேரளாவில் முன்பு அப்படி இருந்தது. இப்போது அவர்கள் மற்றமொழிப் படங்களைப் பார்த்து கெட்டுவிட்டார்கள். ஆனால் தமிழில் விதவிதமான கதைகள் வருகின்றன.

இயக்குநர்கள் புதிது புதிதாக செய்கிறார்கள். இந்திய சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவின் களம் வேறுபட்டிருக்கிறது. அதே நேரம் புதுமையாக வருகின்ற சினிமாக்களுக்கு மசாலா சினிமாக்கள் எப்போதும் எதிரியாகவே இருக்கிறது. நல்ல வேளையாக தமிழ் சினிமாவுக்கு அந்த ஆபத்து குறைவாக இருக்கிறது.

உங்கள் பார்வையில் இந்திய சினிமா எப்படியிருக்கிறது?
இந்திய சினிமாவுக்கு நூறு வயது என்கிறார்கள். அது தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ள அளவுக்கு கதைக் களத்தில் வளரவே இல்லை. உலக சினிமா மேதைகள் நகைக்கிற அளவில்தான் இந்திய சினிமா இருக்கிறது. சில படங்கள் இங்கே நன்றாக இருந்தாலும் (ஸ்லம்டாக் மில்லினியர்) அதுவும் ஹாலிவுட்டில் இருந்து வந்து எடுத்ததாக இருக்கிறது.

இங்கே இருப்பவர்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷன் வந்துவிட்டால் போதும் என்று சினிமாவை விலைமாது போல வைத்திருக்கிறார்கள். இங்கிருக்கும் பெரிய பெரிய இயக்குநர்கள் கூட, அவர்களால் சினிமாவை மாற்ற முடியும் என்ற நிலையிலும் கூட அதற்கு எந்த முயற்சியும் எடுக்காதது வருத்தமாக இருக்கிறது.

நாலு பாட்டு, இரண்டு சண்டை கதைகளை எடுத்துவிட்டு அதை எந்த தைரியத்தில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் நாயகனும் நாயகியும் (பாட்டுக்கு) ஆடிக்கொண்டிருப்பார்கள். ஆஸ்கர் கமிட்டியினர் ஒரு மூலையில் சிரித்துக்கொண்டிருப்பார்கள். இதுதான் நிலைமை.

ரசிகர்கள் மாறினாலும், இயக்குநர்கள் மாறவில்லை. ஒரு படம் வெற்றி அடைந்தால் அதே போல மறுபடியும் மறுபடியும் எடுக்கிறார்கள். இப்போது கொஞ்சம் மாறியிருக்கலாம். ஆனால் இந்திய சினிமா இப்போது ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.

இப்படிப்பட்ட படங்களுக்குப் படத்தொகுப்பு செய்து உங்களுக்கு அலுப்பு ஏற்படவில்லையா?

கண்டிப்பாக அலுப்புதான் ஏற்படுகிறது. அதற்குத்தான் மாறுபட்ட கதைக்களங்கள், புதுப்புது இயக்குநர்கள் என்று போய்க்கொண்டே இருக்கிறேன். நல்ல சினிமாவுக்குத்தான் நானும் காத்திருக்கிறேன். அந்த நம்பிக்கையில்தான் பயணிக்கிறேன்.

மணிரத்னம் படங்களுக்குப் பணியாற்றும் போது, உங்களுக்கு முழு சுந்திரம் கிடைக்குமா?
மணிரத்னம் ஒரு வலுவான இயக்குநர். தொழில்நுட்பத்தில் பணிபுரிபவர்களுக்கு முழு சுந்திரம் கொடுப்பார். அப்படிப்பட்ட சுதந்திரத்தால் நமக்கு இன்னும் சவால் இருக்கும்.

அதே போல அவருக்கு என்ன வேண்டும் என்பதையும் மிக நேர்த்தியாக நம்மிடமிருத்து பெற்றுக்கொள்வார். எப்படிப்பட்ட நிலையிலும் இயக்குநருக்கும் எடிட்டருக்கும் சரியான புரிதல் இருக்கவேண்டும். அப்போதான் படத்தின் வெளிப்பாடு சிறப்பாக இருக்கும். அவருடைய "கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் எடிட்டிங்குக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

டத்தொகுப்பில் உங்கள் பாணி?

என்னைப் பொறுத்த அளவில் ஒரு எடிட்டர் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு இப்படித்தான் செய்வேன் என்று இருக்கமுடியாது. ஒரு படத்துக்கு முதல் ரசிகன் எடிட்டர்தான். எனவே அவருக்குப் பொறுப்பு அதிகம்.

அந்தப் படத்துக்கு எது வேண்டுமோ அப்படி அந்தப் படத்தில் பயணிப்பதுதான் என் பாணி. தேவைப்படாத இடத்தில் என் திறமையைக் காட்டுவது, எனக்குப் பிடிக்காது. எனக்கு சினிமா ரியாலிட்டியாக இருக்க வேண்டும்.

சிலர் டிஜிட்டல் எபெக்ட்களை தேவையில்லாம் சேர்த்து சினிமாவை மேலும் சினிமாதனமாக மற்ற முயல்வார்கள். நான் சினிமாவை வாழ்க்கையாகப் பார்க்க விருப்புகிறேன். எளிமை மற்றும் தெளிவுதான் என் எடிட்டிங் பாணி.

படத்தொகுப்பில் புதுமையானதைச் செய்யும் போது இயக்குநர்கள் ஈகோ பார்ப்பார்களே?
ஒரு படம் நன்றாக வரவேண்டும் என்றுதான் இயக்குநருக்கும் ஆசை. எடிட்டருக்கும் ஆசை. இங்கே நான் பெரியவன் நீ பெரியவன் என்று பார்க்க முடியாது. எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருக்க முடியாது. அதுவும் சினிமாவில் அப்படி இருக்கவே முடியாது. ஆனால் நான் பெரும்பாலும் தெரிந்தவர்களுடன் பணியாற்றியதால் எனக்கு அந்த மாதிரி பிரச்னைகள் ஏற்படவில்லை.

எடிட்டருக்கும் இயக்குநருக்கும் எங்கு மோதல் உருவாகும்?

நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. காட்சிகளை ரொம்பவும் செலவு செய்து, ரிஸ்க் எடுத்து பண்ணியிருப்பார்கள். ஆனால் எடிட்டிங்கில் பார்த்தால் அவற்றுக்குத் தேவையே இருக்காது. இந்தக் காட்சி வேண்டாமே என்று நாம் சொன்னால், இயக்குநர் அதை மறுக்கக்கூடும். அது போன்ற நேரங்களில் இயக்குநர் அந்தக் காட்சி தேவைதான் என்பதற்கு நிறைய காரணம் வைத்திருப்பார்.

நாம் அந்த நேரத்தில் எடிட்டிங்கில் இருக்கிற சூட்சுமத்தையும், பார்வையாளனுக்கு ஏற்படும் ஏமாற்றத்தையும் எடுத்துச் சொல்வோம். இயக்குநர் அதை வைத்தேயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால், கடைசியில் அவர் பக்கம்தான் நாம் போக வேண்டும்.

இயக்குநர்தானே ஒரு படத்துக்கு கேப்டன்?

இருந்தாலும் ஒரு எடிட்டர் இயக்குநருக்காகவோ, பெரிய நடிகர் என்றோ எடிட்டிங்கில் சமரசம் செய்துகொள்ள முடியாது. எடிட்டருக்கு அவர்களுடைய உழைப்பும் அவர்கள் செய்துள்ள செலவும் பிரமிப்பாகத் தெரிந்தால் படத்தில் மாபெரும் தொய்வு ஏற்படும். எடிட்டரைப் பொறுத்தவரை அவருக்கு அது ஒரு தொழில். அதில் கவர்ச்சியும் கலை நேர்ந்தியும் முக்கியமாக இருக்கவேண்டும். எனவே இதில் வரும் சிறுசிறு மோதல்களைத் தவிர்க்க முடியாது.

சிறப்பாக இருந்தும் நீங்கள் வெட்டிவிட நேர்ந்த காட்சி எந்தப் படத்தில்? வெட்டியே தீரவேண்டும் என்று நினைத்தும் வெட்டமுடியாமல் போன காட்சி எந்தப் படத்தில்?

"கமிலே' என்றொரு ஹிந்தி படம். அந்த படத்தில் தொடக்கத்தில் வரும் ஐந்து நிமிட ஆக்ஷன் காட்சி மொத்தப் படத்தையும் தொல்லை பண்ணிக்கொண்டிருந்தது. ஆனால் ரொம்ப அழகான சண்டைக் காட்சி அது. கோடிக் கோடியாக செலவு செய்து எடுத்திருந்தார்கள். எனக்கு அந்தக் காட்சி உறுத்தியது. படத்தைப் பார்த்தவர்களுக்கு அந்தக் காட்சிக்குப்பிறகான படத்தை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அந்தக் காட்சியை எடுத்துவைத்துவிட்டு ஏற்கெனவே பார்க்காதவர்களுக்கு போட்டுக் காண்பித்தோம். அவர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டினார்கள். அந்த தூக்கப்பட்ட காட்சியைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை. அந்தக் காட்சி இல்லாமல் படம் வெளிவந்தது. வெற்றி பெற்றது.

இரண்டாவது விஷயத்துக்கு ஒரு குறிப்பிட்ட படத்தை சொல்ல விரும்பவல்லை. நிறைய படத்தில் அப்படி நடந்திருக்கிறது. நாம் சொல்லுவோம். ஆனால் இயக்குநர் அதற்கு ஒரு காரணம் வைத்திருப்பார். தியேட்டருக்குப் படம் வந்துவிட்டு, அதன்பிறகு ஆடியனஸýக்குப் பிடிக்காமல் இரண்டு, மூன்று நாள் கழித்து வெட்டி ஒட்டி மறுபடியும் போடுவார்கள். இதை பாஸிட்டிவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வசனக் காட்சிகள், பாடல், நடனம், சண்டைக் காட்சி - இதில் உங்கள் பங்கு எங்கு அதிகம்?

அப்படி எதுவும் குறிப்பிட்டுப் பார்க்கமுடியாது. குறிப்பாக, ஒரு பெரிய ஹீரோவின் நடனத்தை ரசிகர்கள் விரும்பிப் பார்க்க வருவார்கள். அங்கு போய் நம் திறமையைக் காட்டுகிறோம் என்று இஷ்டத்துக்கும் எடிட்டிங் செய்தால் ரசிகர்களுக்கு அதில் ஈடுபாடு இருக்காது.

அதே போல ஒரு புதுமுக ஹீரோவுக்கு நடனம் சரியாக வராது. அந்த நேரத்தில் அங்கு யாருடைய நடனம் சிறப்பாக இருக்கிறதோ அதை வைத்து அந்த நடிகரின் நடனத்தை சரி பண்ணவேண்டும். எந்தக் காட்சியையும் சிறப்பாக கொடுப்பதுதான் முக்கியம். அதற்குத்தான் நாம் அதிகம் உழைக்கவேண்டும்.

இத்தனை படங்கள் செய்திருக்கிறீர்கள், இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது?

இதைத்தான் கற்றுக்கொண்டேன் என்று குறிப்பாக சொல்ல முடியாது. ஒவ்வொரு இயக்குநரிடம் பணிபுரியும் போதும் அவர்களிடம் உள்ள புதுமையான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மணிரத்னத்துடன், ஷாஜியுடன், மஞ்சு போராவுடன், விஷால் ராஜுவுடன் பணிபுரியும் போதெல்லாம் எனக்கு புதுப்புது அனுபவங்கள், பார்வைகள் கிடைக்கின்றன. "ஓ.. ஒரு விஷயத்தை இப்படிக்கூட பார்க்கலாமோ, அடடா.. இந்த விஷயத்தை இதுநாள் வரை தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோமே' என்றெல்லாம் தோன்றும்.

உங்கள் சினிமா வாழ்க்கையில் சவாலான படமாக இருந்தது எது?
"வானப்ரஸ்தம்' என்கிற மலையாளப் படம். இந்தப்படம், கதகளியை அடிப்படையாகக் கொண்ட தத்துவார்த்தமான படம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் கதகளி போய்க்கொண்டே இருக்கும்.

எந்த ஒரு இடத்தில் வெட்டவேண்டும் என்றாலும், மிக கவனமாக செய்யணும். ஏன் என்றால் படத்தின் உயிர்ப்பு சிதைந்துவிடும், ஐந்து படங்களுக்கு நான் செய்த வேலையை இந்த ஒரே படத்துக்குச் செய்தேன். இந்தப்படம் என்னுடைய எடிட்டிங் வாழ்க்கையில் மிகச் சவாலான படம்.

உங்களுக்குப் பிடித்த படத்தொகுப்பாளர்கள்?

எப்போதும் பி.லெனினை பிடிக்கும். இப்போது நிறைய இளைஞர்கள் சிறப்பாகச் செய்கிறார்கள். குறிப்பாக, "ஆடுகளம்' கிஷோர் கவனத்தை ஈர்க்கிறார்.

ற்போது செய்து கொண்டிருக்கும் புதிய படங்கள்?

"கடல்', "துப்பாக்கி', "தங்கமீன்கள்', அப்புறம் ஹிந்தியில் ஒரு படம்.

No comments:

Post a Comment