Thursday 12 July 2012

'ஒரு ஈ ஒரு மனிதனைத் தோற்கடித்தால் எப்படி இருக்கும்? ராஜமெளலி




இந்த ஒற்றை ஈயின் ரீங்காரம் தெலுங்குப் பட உலகில் பலத்த அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது. கோடிகளைக் குவித்து, புதிய வசூல் சாதனையை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கும் தெலுங்கு 'ஈகா’ படத்தை அப்படியே தமிழிலும் 'ஈ’ அடிச்சான் காப்பியாக்கி, சில காட்சிகளைத் தமிழுக்கு எனப் படம் பிடித்து சேர்த்து 'நான் ஈ’ என்று வெளியிட்டு இருக்கிறார்கள். அனிமேஷன் சினிமாவைப் பொறுத்தவரை நம் ஊருக்கு இந்தப் படம் ஒரு டிரெண்ட் செட்டர்!

அம்புலி மாமா காலத்துக் கதைதான். நாயகி மேல் ஆசைகொண்டு நாயகனைக் கொல்கிறான் வில்லன். ஹீரோவின் ஆவி(!) அருகில் இருக்கும் 'ஈ’ முட்டை ஒன்றில் புகுந்துகொள்கிறது. அது பிறந்ததும் பூர்வஜென்ம நினைவு வந்து வில்லனைப் பழிவாங்குவதே கதை. இதில் 'ஈ’ அனிமேஷன் மட்டும் புதுசு. வயது வித்தியாசம் இல்லாமல், வகை தொகை இல்லாமல் பட்டையைக் கிளப்புகிறது படம். கிட்டத்தட்ட இரண்டே கால் மணி நேரம் ஓடும் படத்தில் 2,234 காட்சிகள் 'லைவ் ஆக்ஷன் அனிமேஷன்’ எனப்படும் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு இருக்கின்றன.



முட்டையில் இருந்து ஈ வெளிவரும் ஆரம்பக் காட்சிகள் மட்டுமே கார்ட்டூன் தொனி. ஆனால், வில்லனைப் பழிவாங்கத் தொடங்கும் காட்சிகளில் லாஜிக் மறந்து ஈர்த்துவிடுகிறது இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைக்கதை. அதிலும் க்ளைமாக்ஸில் சிறகு இழந்து, ஒற்றைக் கால் உடைந்தபோதும் மிச்சம் இருக்கும் உயிரைத் திரட்டி(!) வில்லனைச் சாய்த்து தானும் பலியாகும் காட்சியில்... கண்களில் நீருடன் கைதட்டுகிறது ஒட்டுமொத்த அரங்கமும்.

நம்மவர்களுக்குப் பழிவாங்கும் கதையும் புதிது அல்ல... அனிமேஷன் படமும் புதிது அல்ல. ஆனால், அதில் காமெடி, காதல், ஃபேன்டஸி, சென்ட்டிமென்ட் சேர்த்து ஜோரான காக்டெய்ல் ஆக்கிய மிக்ஸிங்தான் சுவாரஸ்யம். அதன் முழுப் பெருமையும் இயக்குநர் ராஜமௌலிக்கே!

இப்போதைய டிரெண்டில் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர் இவர்தான். இவர் இயக்கிய எட்டுப் படங்களும் ஆந்திரத்தில் பெரும் வசூல் சாதனை படைத்தவை. 'ஸ்டூடன்ட் நம்பர்-1’, 'எமடொங்கா’, 'சிறுத்தை’, 'மஹதீரா’, 'மரியாதை ராமண்ணா’ எனக் கோடிகளைக் குவித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். வெறுமனே கமர்ஷியல் கலக்கல் மட்டும் இல்லாமல், காமெடியன் சுனிலுக்கு சிக்ஸ்பேக் வைத்து ஹீரோ ஆக்குவது, ரக்ஃபி விளையாட்டை மையமாக வைத்து முழு நீள சினிமா எடுப்பது, பூர்வஜென்மக் கதையில் வரலாற்று ஃபேன்டஸி சேர்ப்பது, 'ஈ’ சினிமா என இவருடைய ஒவ்வொரு படமும் பலே விருந்துவைக்கும் பரிசோதனை முயற்சியாகவே இருக்கும்.

''இந்த 'ஈ’ படம் இயக்கும் எண்ணமே எனக்குக் கிடையாது. பிரபாஸை வைத்து ஒரு மெகா பட்ஜெட் படம் எடுப்பதற்கு முன்னால், நாலைந்து மாதங்களில் முடிக்கும் அளவுக்கு ஒரு படம் எடுக்கத்தான் எண்ணம். 'ஒரு ஈ ஒரு மனிதனைத் தோற்கடித்தால் எப்படி இருக்கும்?’ என்று பல வருடங்களுக்கு முன் என் அப்பா விஜயேந்திர பிரசாத் சொன்ன ஒரு வரி திடீர் என ஃப்ளாஷ் அடித்தது. அதைப் பிடித்துக்கொண்டு 'ஈ’யை ஹீரோவாகவைத்து திரைக்கதை எழுதினேன். எழுதி முடித்துப் பார்த்தால், அந்தப் படத்தைப் போகிறபோக்கில் எடுக்க முடியாது என்று தோன்றியது. 'மஹதீரா’ படத்தில் கிராஃபிக்ஸ் என்பது பின்னணியாக அமைந்துஇருக்கும். ஆனால், இந்தப் படத்தில் கிராஃபிக்ஸும் அனிமேஷனும் தான் முன்னணியில் இருக்கும். நடிகர்கள் பின்னணியில்தான் இயங்குவார்கள். அதிலும் ஒரு 'ஈ’ முகத்தில் 80 சதவிகிதம் அதன் கண்கள்தான். ஈயின் கண்களை வைத்து காதல், கோபம், சந்தோஷம் என்று எந்த உணர்ச்சிகளையும் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போது பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோஸின் டைட்டில் கார்டில் தத்தித் தாவும் ஒரு டேபிள் லேம்ப் என் நினைவுக்கு வந்தது. அந்த விளக்குக்கு முகமே கிடையாது. ஆனால், அது சந்தோஷமாக இருப்பதை அதன் அசைவுகளிலேயே உணர்த்திவிடுவார்கள். அப்படி இந்த ஈக்கும் உடல்மொழி ஏற்றுங்கள் என்று சொன்னேன்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு அனிமேஷன் ஈயை உருவாக்கினார்கள். என் 10 வருட சினிமா அனுபவத்தில் நான் அப்போதுதான் மிகவும் பயந்துபோனேன். மிகவும் அசிங்கமாக எந்த எமோஷனும் இல்லாமல் இருந்தது அந்த ஈ. ஆனால், அதற்கே கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் செலவு. ஒருவேளை ஒரு கோடி மட்டுமே செலவாகி இருந்தால், இந்த புராஜெக்டை அப்போதே நான் கைவிட்டு இருப்பேன். ஆனால், விட்ட இடத்தில்தானே பிடிக்க வேண்டும் என்று வேறு வேறு யூனிட்களில் வேலை செய்து இந்த ஈயை உருவாக்கிவிட்டோம். குழந்தைகள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது தெரியும். ஆனால், பெரியவர்களை யும் குழந்தைகளாக்கி ரசிக்கவைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை'' என்று அடக்கமாகப் பேசுகிறார் ராஜமௌலி.

ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட்மேன்களுக்குச் சவால்விட்டு இருக்கிறது இந்த இந்திய ஈ. முன்பெல்லாம் தியேட்டரில் ஈ ஓட்டுகிறோம் என்பார்கள் பரிதாபமாக... இப்போது ஈ ஓட்டுகிறோம் என்கிறார்கள் பரவசமாக!

No comments:

Post a Comment