Saturday 14 July 2012

பில்லா 2 - அஜித்தை தவிர வேறொன்றும் இல்லை!




முதல் விஷயம், படத்தில் அஜித் அகதியாகவே இருக்கிறாரே தவிர அவர் இலங்கை அகதி என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. ( ரொம்ப சாமர்த்தியமாக நடந்துகொண்டதாக இயக்குனர் நினைத்துக் கொள்ளலாம்! ) இரண்டாவது அவர் அகதிகளுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை. 


பில்லா படத்தில் எவ்வளவு தூரம் நடந்தாரோ, அதைவிட அதிக தூரம் பில்லா-2 வில் நடந்திருக்கிறார். சண்டை, கொலை, கொள்ளை என படம் முழுக்க ஒரே ரத்தத் தெரிப்பு தான். குருவி சுடுவது மாதிரி ஆட்களை சுடுவது, காய்கறி வெட்டுவது மாதிரி மனிதர்களை வெட்டுவது என படம் முழுக்க டுமீல் டுமீல்! சதக் சதக்! சத்தங்கள் தான். படத்தின் ஹைலைட்டாக நிற்பது ஒரே ஒரு விஷயம், அது அஜித்தின் உழைப்பு!


அகதியாக தமிழகத்தின் எல்லைக்குள் வந்து சேர்கிறார் அஜித். ஒரு அக்கா சென்னையில் இருப்பதாக சொல்லி அகதிகள் முகாமில் அடைக்கலமாகிறார். மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சென்னைக்கு வைரத்தை கடத்தும் தொழிலில் தெரியாமல் இறங்குகிறார். 


காசு நிறைய கிடைத்ததும், இதே தொழிலை ஏன் தொடரக்கூடாது என்று நினைத்து, தொடர்ந்து சில கடத்தல் வேலைகளில் இறங்குகிறார். அதன் ஆரம்பமாக சில கொலைகளும் செய்கிறார். கொலைகளும் கொள்ளைகளும் தொடர்கின்றன. 


படம் முழுக்க இருப்பது மூன்றே விஷயம் தான். அவை ரத்தம்! ரத்தம்! ரத்தம்! அஜீத்தின் கடத்தல் தொழில் மாநிலம் விட்டு மாநிலம் என வளர்ச்சி அடைகிறது. தனக்கு எதிராக வரும் எல்லோரையும் கொலைசெய்கிறார். பின் கண்டம் விட்டு கண்டம் தாவுகிறார் அஜித். இறுதியில் உலகலாவிய டானாக எப்படி ஆனார் என்பதே கதை!


படத்தின் ஒளிப்பாதிவு ஹாலிவுட் தரத்தில் இருப்பது படத்தின் ப்ளஸ். அஜித்தை மாஸாகவும் க்ளாஸாகவும் நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறது ஆர்.டி.ராஜசேகரின் கேமரா. படத்தின் வசனங்கள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. 


அஜித்தின் நடிப்பைவிட அவர் திரையில் தோற்றமளித்த விதம் பிரமாதம். கூலிங் கிளாஸ், கோட்டு சூட்டு என ஹாலிவுட் நடிகர் மாதிரி நச்சுன்னு இருக்கிறார். இப்போதைய தமிழ் சினிமாவின் வேற எந்த ஹீரோவுக்கு இந்த கெட்-அப் ஒத்துவராது என்பதில் சந்தேகமில்லை. ( தொப்பையை குறைத்தால் நல்லா இருக்கும், சண்டைபோடும் போது கால தூக்க ரொம்பவே கஷ்டப்படுகிறார் அஜித் ) 


பார்வதி ஓமனகுட்டனும் ப்ரூனா அப்துல்லாவும் வந்து போறாங்களே தவிர, படத்தில் ஹீரோயின் என்று யாரும் இல்லை. அதுவும் ஹீரோயின்களிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது எதுவுமே படத்தில் இல்லை. காதல் காட்சிகளுக்கு இடமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் படத்தில் காதலே இல்லை. கவர்ச்சியும் இல்லை.





முதலமைச்சரை கொலை செய்வது, இவ்வளவு நடந்து முடிந்தும் படத்தில் போலிஸ் வராதது, அஜித்தை அடித்து உதைத்து முகம் முழுக்க காயம் இருந்தாலும், அடுத்த சீனில் மொழு மொழுன்னு அமுல் பேபி மாதிரி இருப்பது, என பல காட்சிகளில் லாஜிக் இல்லை. 


அப்போ என்ன தான் இருக்குன்னு நீங்கள் கேட்டா, அதற்கான பதில் அஜித் என்ற ஒரு வார்த்தைதான் பதிலாக இருக்க முடியும். ஆம், அஜித்தை தவிர படத்தில் வேற எதுவும் ஸ்பெஷல் இல்லை. அஜித்தே எங்களுக்கு ஸ்பெஷல் தான் என நினைக்கும் தல ரசிகர்கள் பில்லா-2 வை கொண்டாடுவதில் ஆச்சர்யம் எதுவும் இருக்க முடியாது.

No comments:

Post a Comment