Wednesday 20 June 2012

இசை வெளியீட்டு விழாவில் வழக்கு எண் விவகாரமும்! அறிவுமதியின் அறிவுரையும்...!!


இயக்குநர் சசியின் உதவியாளர் யுவராஜ் இயக்கத்தில் வினோத், புதுமுகம் நித்தி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் கலியுகம். இந்தபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக எடிட்டர் மோகன், பாடலாசிரியர் அறிவுமதி, டைரக்டர் சுசீந்திரன், ராஜேஷ், சசி, மனுஷ்ய புத்திரன், தாஜ்நூர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அறிவுமதி, பாலுமகேந்திரா, பாக்யராஜ், பாரதிராஜா போன்ற இயக்குநர்களிடம் பணியாற்றி உள்ளேன். கலைப்புலி தாணு அவர்கள் மூலம் பாடல் ஆசிரியராக சினிமாவில் நுழைந்தேன். சசியின் சொல்லாமலே படத்தில் வந்த சொல்லாதே சொல்ல சொல்லாதே... என்ற பாட்டுக்கு தேசிய விருதும் பெற்றேன். அதன் பிறகு பல 100 பாடல்கள் எழுதிவிட்டேன். இங்கு வந்திருக்கும் மனுஷ்ய புத்திரனிடம் ஒரு கேள்வி, அவர் தனது உயிர்மெய் பத்திரிக்கையில் சமீபத்தில் வழக்கு எண் படம் குறித்து விமர்சித்து எழுதி இருந்தார். அவர் விமர்சித்த பாங்கு மனசாட்சிக்கு எதிரானது. தாய்மார்களின் தாலியை அடகு வைத்து சினிமாவுக்கு வந்தவர் பலர். இப்போது தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. மெல்ல துளிர்க்கும் அந்த நம்பிக்கையை நறுக்கிவிடாதீர்கள். எத்தனையோ பேர் வாழ்க்கையை சினிமாவுக்காக பலி கொடுத்தவர்கள் இருக்கிறார்கள். தமிழ் சினிமா ஒன்றும் சளைத்தது அல்ல. புதிது புதிதாக உலகத்தரத்தோடு செழித்து விளைவதாக உள்ளது. இப்படி ஒரு படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். இதை தவிர வேறு எப்படி நல்ல சிறந்த படங்களை கொடுக்க முடியும், வேண்டுமானால் இலக்கிய கூட்டம் வைத்து விவாதம் செய்யுங்கள், நாங்கள் தயார், உங்களால் முடியுமா... படத்தை பற்றி நாங்கள் விளக்கம் ‌சொல்கிறோம். தவறான பதிவுகளை இனி எந்த படத்துக்கும் கொடுக்காதீர்கள் என்று அறிவுமதி சொல்ல, அதற்கு மனுஷ்புத்திரன் நான் குப்பை என்று சொல்லவில்லை. எனக்கு சில இடங்களில் புரியவில்லை என்று தான் சொல்லி இருந்தேன். எத்தனையோ படங்கள் வருகின்றன. நான் அதை எல்லாம் விமர்சிப்பது இல்லை. இங்கு எத்தனையோ நல்ல இயக்குநர்கள் இருக்கிறார்கள், இனி இலக்கிய வாதிகளை கூப்பிடாதீர்கள் அந்‌த வகையான எழுத்துக்களை, விமர்சனங்களை எதிர்பார்க்காதீர்கள் என்றார். இதனையடுத்து பேசிய எடிட்டர் மோகன் மனுஷ்புத்திரனை ஒரு பிடிபிடித்து விட்டார். நான் ஒரு பிஸ்னெஸ் மேன். ஒருபடம் எடுத்து, அந்தபடம் முடிந்து வெளியிடும் வரை எத்தனை வலி என்பது எனக்கு தெரியும். அவர் ஒரு எழுத்தாளர், அந்த வலி அவருக்கு தெரியாது. நீங்கள் இப்படி கடுமையான விமர்சனம் செய்வதால் அந்த படத்திற்கு டிக்கெட் எடுத்து படம் பார்க்க போக நினைப்பவர் கூட ஒரு முடிவு செய்துவிடுவார். அது படத்திற்கு பெரிய பாதிப்பு. நீங்கள் விமர்சனம் செய்வதாக இருந்தால் தனியே கூப்பிட்டு பேசுங்கள். உங்கள் சந்தேங்களை கேளுங்கள், இனி இப்படி செய்யாதீர்கள், வியாபாரத்தை பாதிக்கும் என்றார். ஆக மொத்தத்தில் வழக்கு எண் 18/9 பட விவகாரம் சமீபத்தில் மிஸ்கின் பேச்சு, இப்போது இவர்களின் விவாதங்கள் என்று படத்திற்கு நாளுக்கு நாள் பப்ளிசிட்டி கூட கொண்டே தான் போகிறது.

No comments:

Post a Comment