Saturday 23 June 2012

'நான் ஜெயிச்சா, ஃபெப்சிக்கு நல்லது. தோத்தா, எனக்கு நல்லது. அமீர்


  வேலை நிறுத்தம், போராட்டம் என்று அதகளப்படுத்தி வரும் ஃபெப்சி அமைப்புக்கு, கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. பொருளாளர் பதவிக்குப் போட்டியே இல்லாமல் சண்முகம் அங்கமுத்துவைத் தேர்வு செய்தனர். தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட விசுவை எதிர்த்துக் களம் இறங்கினார் அமீர். ஏற்கெனவே, பொதுச்செயலாளராக இருக்கும் சிவாவை எதிர்த்து உமாசங்கர் போட்டியிட்டார்.
 ஃபெப்சியில் மொத்தம் 23 அமைப்புகள். கருத்து வேறுபாடு காரணமாக டிரைவர்கள் யூனியன் மட்டும் விலகிப்போனது. மொத்தம் 24,000 தொழிலாளர்களைக் கொண்ட ஃபெப்சி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்து எடுக்கும் உரிமை, ஒவ்வொரு சங்கத்தையும் சேர்ந்த தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு மட்டுமே உண்டு. ஆக, 22 யூனியன்களுக்கும் சேர்த்து மொத்த ஓட்டுகளே 66-தான்.
இயக்குநர்கள் சங்கத்தில் செயலாளர், பொரு ளாளர் வாக்குகள் மட்டும் பதிவாயின. தலை​வரான பாரதிராஜா வெளியூரில் இருந்து, 'தனது வாக்கை ரெங்கராஜன் பதிவு செய்வார்’ என்று கடிதம் கொடுத்து அனுப்பினார். ஆனால், அந்தக்கடிதம் செல்லாது என்று விசுவும், அமீரும் அறிவித்தனர். அதனால், பதிவான 65 வாக்குகளை மட்டும் கணக்கில்கொண்டு, எண்ணிக்கை தொடங்கியது.
'நான் ஜெயிச்சா, ஃபெப்சிக்கு நல்லது. தோத்தா, எனக்கு நல்லது’ என்று சொல்லிவந்த அமீர், விசுவை விட 9 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். அடுத்து, உமாசங்கரை விட இரண்டே வாக்குகள் அதிகம் வாங்கி செயலாளராக, சிவா ஜெயித்தார்.  
முன்பு, அமீர் ஊதியக் குழு தலைவராக இருந்தபோது, 'ஃபெப்சி தொழிலாளர் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தைக்கு அமீர் வரக்கூடாது’ என்று நிபந்தனை விதித்தது தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம். இன்று, பெப்சி தலைவராக வந்திருக்கும் அமீரை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

No comments:

Post a Comment