Saturday 23 June 2012

கிராமியப் படத்திற்கு இசை அமைக்கும் பவதாரிணி




        முழுக்க முழுக்க கிராமத்தில் எடுக்கப் படவிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்திற்கு இசைஞானியின் மகள் பவதாரிணி இசை அமைக்க இருக்கிறார்.

'வெள்ளச்சி' எனும் அக் கிராமத்து திரைப்படத்திற்கு இசை அமைக்கவிருக்கும் பவதாரிணி இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது, "வெள்ளச்சி திரைப் படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. கிராமத்துக் கதை என்பதால், இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்து இசை அமைக்க சம்மதித்தேன். படத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும். கவிஞர் நா.முத்துக் குமார் எழுதிய ஒருபாடல் கம்போசிங் முடிந்து விட்டது. இனிதான் ஆண் பாடகர் யாரைப் பாடவைப்பது என்று முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

படத்தின் இயக்குனர் வேலு விசுவநாதன் பேசுகையில், "கிராமத்தில் எல்லோரும் கருப்பாக இருப்பார்கள். ஆனால் ஹீரோயின் மட்டும் வெள்ளையாக இருப்பதால் ஊரே அவளை வெள்ளச்சி என்று செல்லமாக கூப்பிடுவார்கள். ஆனால் அவ்வளவு செல்லமாக கூப்பிட்டவர்கள் கிளைமேக்சில் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை. வேலூர், குடியாத்தம், ஆம்பூர் போன்ற ஊர்களில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது" என்றார்.

இத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மகன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். சுசித்ரா எனும் பெண் அறிமுக நாயகி ஆகிறார். நடிகை ரேவதி இயக்கி, நடிகை ஷோபனா நடித்து ஆங்கிலத்தில் வெளிவந்த "மித்ர மை பிரன்ட்" எனும் திரைப்படத்தில் முதன் முதலில் இசை அமைப்பாளராக அறிமுகமானார் பவதாரிணி. பாரதி, அழகி, மங்காத்தா என்று பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் பவதாரினிக்கு பாரதி படத்தின் "மயில்போல பொண்ணு ஒன்னு" பாடல் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment