Friday 22 June 2012

சத்யம் சினிமாஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்பெக்ட்ரம் மால். கமல் திறந்துவைத்தார்



   சத்யம் சினிமாஸ்’ நிறுவனம் பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலில் ‘எஸ்-2’ என்ற பெயரில் 5 நவீன சினிமா தியேட்டர்களை திறந்துள்ளது. நடிகர் கமலஹாசன் இந்த தியேட்டர்களை இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

‘3டி’, டிஜிட்டல் என நவீன தொழில்நுட்பத்தில் 5 தியேட்டர்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 1381 சொகுசு இருக்கைகளுடன் இது உருவாக்கப்பட்டு உள்ளது. பெரிய தியேட்டரில் 300 இருக்கைகளும், சிறிய தியேட்டர்களில் 222 இருக்கைகளும் உள்ளன. ஸ்பெக்ட்ரம் மாலில் இரண்டாவது தளத்தில் இத்தியேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மூன்று தியேட்டர்களில் இன்று கார்த்தி நடித்த ‘சகுனி’ படம் திரையிடப்பட்டது. மற்ற இரு தியேட்டர்களில் ஆங்கிலம், இந்திப் படங்கள் வெளியாயின. 

தியேட்டரை திறந்து வைத்து கமலஹாசன் பேசியதாவது:- 

பெரம்பூருக்கு பல வருடங்களுக்கு முன் ஒரு நண்பரை பார்க்க நான் அடிக்கடி வருவது உண்டு. இன்று பெரம்பூர் முன்புபோல் இல்லாமல் நிறைய மாறி இருக்கிறது. நண்பரின் வீடு அடையாளம் தெரியவில்லை. 

1959-க்கு முன் இந்த இடம் நாடக கொட்டகையாக இருந்தது. அதன்பிறகு வீனஸ் தியேட்டராக மாறியது. தற்போது ‘மால்’ ஆகி நவீன தியேட்டர்கள் வந்துள்ளது. சினிமா கலை வேகமாக வளர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

நாடக கொட்டகை இங்கு இருந்தபோது எனது குருநாதர் அவ்வை சண்முகம் நடித்து இருக்கலாம். சிவாஜி நடித்து இருக்கலாம். இப்போது அவர்கள் குழந்தையான கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் இத்தியேட்டரில் வரப்போகிறது. சினிமாவை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இது உதாரணம் ஆகும். 

1980-ல் டி.வி. வந்தபோது தியேட்டர்கள் அழிந்துவிடும் என்றனர். நான் வளரும் என்றேன். நான் சொன்னதுதான் இப்போது நடந்து வருகிறது. டி.வி. மூலம் வீட்டுக்குள் எத்தனை படங்கள் வந்தாலும் மக்கள் வெளியேபோய் படம் பார்ப்பதைதான் விரும்புகிறார்கள். 

‘விஸ்வரூபம்’ படத்தில் சவுண்ட் தொழில்நுட்பத்தில் புதுமை செய்ய உள்ளோம். படங்களில் 5.1, 7.1 அளவுதான் சவுண்ட் தொழில்நுட்பம் இருக்கிறது. விஸ்வரூபம் படத்தில் முதல் முறையாக 11.1 அளவு சவுண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுதத உள்ளோம். இதற்காக அமெரிக்கா செல்ல உள்ளோம். 

இவ்வாறு கமலஹாசன் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் சத்யம் சினிமாஸ் நிர்வாக இயக்குனர் சொரூப் ரெட்டி கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment