Thursday 21 June 2012

நான் நல்லவனா கெட்டவனா என்பதை விஸ்வரூபம் வெற்றி சொல்லும். கமல்


விஜய் அவார்ட்ஸ் விழாவின் சில சுவராஸ்ய துளிகள் இங்கே...! கோபிநாத்துடன் இணைந்து மேடை ஏறியதுமே, ‘‘அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா... ரசிகர்களே... நானும் அவங்கள்லாம் வருவாங்கனுதான் கோட்டை திருடிப் போட்டு வந்திருக்கேன்’’ என்று அப்ளாஸ் மேளாவை ஆரம்பித்துவைத்தார் சிவ கார்த்திகேயன். கதாநாயகிகள் ஆண்ட்ரியா, பூஜா குமாரோடு மேடையேறி ‘விஸ்வரூபம்’ டிரெய்லரைத் திரையிட்டார் கமல். ‘படத்துல நான் நல்லவனா... கெட்டவனாங்கிறதை வசூலைப் பொறுத்துதான் சொல்ல முடியும். படத்தோட சிறப்புனு சொல்லணும்னா, ரசிகர்கள்தான். இவ்வளவு விலையில் பெட்ரோல் விக்கும்போதும் நான் வண்டிக்கு பெட்ரோல் போட முடியுதுன்னா, அதுக்குக் காரணம் அதே ரசிகர்கள்தான்’’ என்று நெகிழ்ந்தார் கமல். சிறந்த பாடலுக்கான போட்டியில் கடைசி வரை மல்லுக்கட்டிய இரண்டு பாடல்கள்... வைரமுத்துவின் ‘சரசர சாரக் காத்து’ மற்றும் மதன் கார்க்கியின் ‘என்னமோ ஏதோ...’ இறுதியில் மகனை முந்தி விருது வென்றார் தந்தை. ‘‘45 ஆண்டுகளுக்கு முன் நான் அனுபவித்த உணர்வைப் பாடலாக்கினேன். என் மனைவிக்கும் எனக்கும் ஒரே நாளில் பிரசவமானது. ஆம், நான் என் முதல் பாடலை எழுதியபோதுதான் மதன் கார்க்கி பிறந்தான். எமனோடு போட்டி போடுவது எளிது. மகனோடு போட்டி போடுவது கடிது’’ என்று கம்பீரமாகப் பேசிச் சென்றார் வைரமுத்து. ‘பெஸ்ட் ஆக்டர்’ என்று எழுதப்பட்ட டி-ஷர்ட்டோடு ப்ரேம்ஜி, ‘பெஸ்ட் டைரக்டர்’ என்று எழுதப்பட்ட டி-ஷர்ட்டோடு வெங்கட் பிரபு... அதைக் கலாய்த்த தொகுப்பாளர்களிடம், ‘‘நீங்களா விருது தர மாட்டீங்கன்னுதான் நாங்களே இப்படி வந்துட்டோம்’’ என்று அலேக் விளக்கம் கொடுத்தார் வெங்கட். ஆனால், ‘ஃபேவரைட் இயக்குநர்’ என்ற விருது வெங்கட்டுக்குக் கிடைத்தது. வாழ்நாள் சாதனைக்கான செவாலியே சிவாஜி கணேசன் விருது ‘பாடும் நிலா’ பாலுவுக்கு. அவரை, ‘‘அண்ணே ரண்டி... அண்ணே ரண்டி...’’ என்று மேடைக்கு அழைத்த கமல், ‘‘சினிமாவில் எனக்குக் கிடைத்த சில அண்ணன்களில் எஸ்.பி.பி.யும் ஒருவர்’’ என்று நெகிழ்ந்தார். ‘‘பாடாத மேடை இல்லை. போடாத வேஷம் இல்லை. சிரிப்புக்குப் பஞ்சமில்லை’’ எனப் பாடி உருகவைத்த எஸ்.பி.பி.க்கு கமல், ஏ.ஆர்.ரஹ்மான், பிரபு, மூவரும் இணைந்து விருது அளித்தனர். ‘‘காலங்காத்தால வீட்ல காபி இருக்கோ இல்லையோ... கோபி இல்லாம விஜய் டி.வி. நிகழ்ச்சி இல்லை’’ என்று மேடை ஏறியதுமே அலப்பறையை ஆரம்பித்தார் சந்தானம். ‘‘என்ன, ஹீரோவுக்குப் போட்டியா டிரெஸ் பண்ணி இருக்கீங்க?’’ என்று அருண் விஜய் கேட்க, ‘‘விருது வாங்குறோம்னு இன் பண்ணிக்கிட்டு வந்தேன்பா. அப்படியே லுங்கி கட்டிட்டா வர முடியும்?’’ என எகிறிய பந்துகளைக்கூட சிக்ஸருக்கு விரட்டினார் சந்தானம். சிறந்த நடிகருக்கான விருதை விக்ரமுக்கு வழங்கியது பிரபுதேவா. இதே பிரபுதேவாவுக்கு ‘காதலன்’ படத்தில் விக்ரம் பின்னணிக் குரல் கொடுத்த நினைவுகள் அப்போது மலர்ந்தன. 'பெஸ்ட் என்டர்டெயினர்' விருது தனுஷுக்கு. விழா துவக்கத்தில் இருந்தே ஆடிப் பாட, கலகலப்பாகப் பேச என்று தனுஷ் உற்சாகமாக இருந்தாலும், மறந்தும் தன் மனைவி ஐஸ்வர்யா பக்கம் பார்வையைப் பதிக்கவில்லை. ‘ஆடுகளம்’ குழுவினருக்கான விருதினைப் பெற வெற்றிமாறன் அழைத்தும் மேடையேறவில்லை தனுஷ். மைக்கில் வம்பாக அழைத்த பிறகே மேடை ஏறினார். காரணம், அந்தக் குழுவினருக்கு விருது வழங்கியது ஐஸ்வர்யா தனுஷ். விருது பெறும்போதும் ஐஸ்வர்யாவுக்கு எதிர்ப்புறமாக நின்றபடி துளிச் சிரிப்பையும் சிந்தாமல் இருந்தார் தனுஷ். ஆனால், மேடையில் பாட்டு, டான்ஸ் என தனுஷின் ஒவ்வோர் அசைவையும் ரசித்துக் கைதட்டிக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. மாலை ஏழு மணிக்குத் தொடங்கிய விழா ஒன்றரை மணிக்குத்தான் முடிந்தது. அப்போது, ‘‘என்னப்பா சனிக்கிழமை சாயங்காலத்துல இருந்து இங்கேயே இருந்தோம்... பார்ட்டி எதுவும் இல்லையா?’’ என்ற வெங்கட் பிரபுவின் கமென்ட்டுக்குத் தூக்கக் கலக்கம் மறந்து கலகலத்தது கூட்டம்!

No comments:

Post a Comment