Friday 29 June 2012

சிக்கலில் சிக்கித்தவிக்கும் விஜய் படம்!




       ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ’துப்பாக்கி’ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். துப்பாக்கி என்ற பெயரை எங்கு கேட்டாலும் இந்த படத்தின் பெயர் தான் ரசிகர்களின் நினைவிற்கு வருகிறது. ரசிகர்களிடையே அவ்வளவு பாப்புலராகிவிட்ட ’துப்பாக்கி’ என்ற பெயருக்குத் தான் இப்போது பிரச்சனை வந்திருக்கிறது.

தயாரிப்பாளர் சி.ரவிதேவன் தயாரிப்பில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் படம் ‘கள்ளத்துப்பாக்கி’. சி.ரவிதேவன் 2009-ஆம் ஆண்டு இந்த படத்தை துவங்கும் போதே ‘கள்ளத்துப்பாக்கி’ என்ற பட டைட்டிலையும், துப்பாக்கிக்கு மேல் ’கள்ளத்துப்பாக்கி’ என்ற பெயர் வருவது போன்ற பட விளம்பர லோகோவையும் தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கை துவங்கிய ஏ.ஆர்.முருகதாஸும் தனது படத்திற்கு அதே போன்ற லோகோவையும் பெயரையும் வைத்துள்ளதால், சென்னை சிவில் கோர்ட்டில் ’கள்ளத்துப்பாக்கி’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி துப்பாக்கி படத்தை ஜூலை 16-ஆம் தேதி வரை ரிலீஸ் செய்யக் கூடாது என்ரு தீர்ப்பளித்து துப்பாக்கி படக்குழுவின் தரப்பிலிருந்து தக்க விளக்கமளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். துப்பாக்கி படத்தின் முதல் போஸ்டர் வெளியிட்ட போது, தங்களது போஸ்டர்களையும் துப்பாக்கி பட போஸ்டரின் அருகில் எச்சரிக்கை செய்யும் விதத்தில் ஒட்டினர் ‘கள்ளத்துப்பாக்கி’ படக்குழுவினர்.

’துப்பாக்கி’ என்ற பெயரை பொதுவாக கொண்ட இரு படங்களுமே அண்டர்கிரவுண்ட் தாதாக்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் தானாம். ’துப்பாக்கி’ படத்தில் நடிகர் விஜய் துப்பாக்கியை கையில் எடுக்கிறார், ‘கள்ளத்துப்பாக்கி’ படத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் துப்பாக்கியை கையில் எடுக்கிறார்கள்.

இந்த பிரச்சனையில் வெடிக்கப்போவது துப்பாக்கியா கள்ளத்துப்பாக்கியா என்பது கேள்விக்குறி.

No comments:

Post a Comment