Friday 29 June 2012

'முடியலே சார்...' முகமூடி ஜீவாவின் தவிப்பு


Mugamoodiதியேட்டர்களின் கார் பார்க்கிங் போலவே அங்கிருக்கும் மேடைகளும் 'ஆள் பார்க்கிங்'ஆகி விடும் சில நேரங்களில். மிஷ்கினின் 'முகமூடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விழாவும் கிட்டதட்ட அப்படிதான் இருந்தது. சத்யம் தியேட்டர் மேடையில் அமர்ந்திருந்த விஐபிகளை இடமிருந்து வலமாக எண்ணி முடிப்பதற்குள் விழாவே முடிந்து போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது கூட்டம். (அவ்வளவு கூட்டத்திலும் நாம் தேடிய படத்தின் நாயகி மிஸ்சிங், ஏனுங்க மிஷ்கின்?) அத்தனை பேரையும் விடாமல் அழைத்து பேச வைத்தார்களே, அதுதான் இன்னொரு அதிர்ச்சி.
நல்லவேளையாக எல்லாருமே சூழ்நிலை உணர்ந்து நாலு வார்த்தைகளுக்கு மிகாமல் தங்கள் பிரமிப்பை வெளிப்படுத்தினார்கள். சூர்யா மற்றும் கவுதம்மேனன் கைகளால் இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 'இந்த படத்தை மிஷ்கின் எப்படி மனசுக்குள் சுமந்துகிட்டிருந்தார்னு எனக்கு நல்லா தெரியும். அற்புதமான கிரியேட்டர் அவர். அதே மாதிரிதான் ஜீவாவும். எல்லா கேரக்டர்களையும் ரொம்ப டெடிக்கேட்டிவா பண்றார். இந்த டீம் ஜெயிக்கணும்' என்று வாழ்த்தி நடுவிலேயே விடை பெற்றார் சூர்யா. (ஷுட்டிங் போகணுமாம்...)
தலைப்புதான் 'முகமூடி'. ஆனால் ஜீவாவின் முகத்தை மட்டுமல்ல, முக்கால்வாசிMugamoodiஉடம்புக்கும் சேர்த்தே மூடி தயாரித்திருப்பார்கள் போலிருக்கிறது. நாசர் பேசும்போது ஜீவாவை கொண்டாடி தீர்த்தார். 'அவனை சின்ன வயசுலேர்ந்து பார்க்குறேன். ஒருநாள், சார் தாங்க முடியல என்றான். வெயில் காலத்துல முகத்தையும் உடம்பையும் மூடிகிட்டு நடிக்கறது எவ்வளவு கஷ்டம்? ஆனால் இந்த அவஸ்தை ரொம்ப சுகமா இருக்கு சார்னு சொன்னான். ஒரு நடிகனுக்கு அது ரொம்ப முக்கியம். ஜீவாவை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு' என்றார் நாசர்.
'மிஷ்கின் வெளிப்படையா பேசுறதை குறைச்சுக்கணும். அவர் பேசுற சில விஷயங்களால் அவரது கிரியேட்டிவிடி மறைஞ்சு போய் அவரது பேச்சுதான் முன்னாடி நிக்குது. ஒரு நண்பன்ங்கிற முறையில என்னோட அட்வைஸ் இது' என்று ஜெயம் ராஜா சொல்ல, தனது அடர்ந்த கூலிங் கிளாசுக்குள்ளிருந்து ராஜாவை லுக்கினார் மிஷ்கின்.
அப்படியே பட்ஜெட்டோட பட்ஜெட்டா மிஷ்கினோட வாய்க்கும் ஒரு மூடி தயார் பண்றதுதானே?

No comments:

Post a Comment