Tuesday 26 June 2012

எதிர்பார்க்கும் தொகை கிடைக்காவிட்டால், உலகம் முழுவதும் விஸ்வரூபத்தை ரிலீஸ் செய்ய கமல் முடிவு.



 
தமிழிலும் ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் தயாராகும் "விஸ்வரூபம்' கதையை ஏழு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய கமல்ஹாசன், தன்னுடைய மற்ற பட வேலைகளுக்கு மத்தியில் அந்தக் கதையை சிறிது சிறிதாக மெருகூட்டி தற்போது முழு படத்தையும் முடித்திருக்கிறார். இதில் கமல், கதக் நடனக் கலைஞராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். அது தவிர, தீவிரவாதி உள்பட இன்னும் சில கெட்-அப்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை ஆரம்பத்தில் கமல்ஹாசனின் "ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் ரூ.60 கோடியில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் மேலும் பல கோடிகளுக்கு எகிறவே பி.வி.பி. சினிமா நிறுவனத்தையும் தயாரிப்புப் பணியில் இணைத்துக்கொண்டார் கமல்ஹாசன். அதே போல் ஆரம்பத்தில் படத்தை செல்வராகவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் பிலிம், டிஜிட்டல் கேமிராக்களில் படமாக்குவது குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வராகவன் விலகவே டைரக்ஷன் பொறுப்பை கமல் ஏற்றுக்கொண்டார்.
இந்தப் படத்துக்கு கதாநாயகியைத் தேடியது போல கமல் தன்னுடைய முந்தைய படங்களுக்குக் கதாநாயகியைத் தேடியிருப்பாரா என்பது சந்தேகம்தான். முதலில் தீபிகா படுகோனே நடிப்பதாக அறிவித்தார் கமல். ஆனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவரால் தேதி ஒதுக்க முடியவில்லை. அதன் பிறகு பிரபல ஹிந்தி நடிகர் அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூரை கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் சில முக்கியமான காட்சிகளில் முகத்தில் மெச்சூரிட்டி தெரியவில்லை என்பதற்காக அவரையும் தவிர்த்துவிட்டார். அடுத்து கத்ரினா கைஃப், சோனாக்சி சின்ஹா, சமீரா ரெட்டி, வித்யா பாலன், பிரியா ஆனந்த், அனுஷ்கா என பல முன்னணி நடிகைகளைப் பரிசீலித்து இறுதியில் பூஜா குமார் கதாநாயகியாக நடிப்பார் என அறிவித்தார் கமல்.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பூஜா குமார் அமெரிக்காவில் வசித்து வருகிறார். "காதல் ரோஜாவே' என்ற தமிழ்ப் படம் உள்பட சில ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட பூஜா குமார் பிரபல விளம்பர மாடலும் கூட. பரதநாட்டியம், கதக், குச்சுபுடி நடனங்களை முறையாகக் கற்றவர் என்பதால் நாயகி வாய்ப்பு இவருக்கு எளிதில் கைகூடியது.
பூஜா குமாரைத் தவிர இஷா ஷெர்வானி, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அதோடு சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான சேகர் கபூர் முதல்முறையாக இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். இவர் தவிர பாலிவுட்டின் பிரபலங்கள் ராகுல் போஸ், ஜெய்தீப் அஹ்லாபத், சாம்ராட் சக்ரவர்த்தி, ஜரீனா வகாப், அதுல் திவாரி ஆகியோருடன் நம்மூர் நாசரும் நடித்துள்ளார்.
தமிழ்ப் பதிப்பின் பாடல்களை கமல்ஹாசனும் கவிஞர் வைரமுத்துவும் எழுதியுள்ளனர். வைரமுத்து எழுதிய ஒரு பாடலால் வெகுவாகக் கவரப்பட்ட கமல்ஹாசன், அவருக்கு எரிமலைக் குழம்புகளால் செய்யப்பட்ட அரிய வகை பேனாவைப் பரிசளித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். ஹிந்திப் பதிப்பின் பாடல்களை பிரபல ஹிந்தி கவிஞர் ஜாவித் அக்தர் எழுதியுள்ளார். சங்கர் இசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளனர். சானு வர்கீஸ் ஒளிப்பதிவுக்கும் மகேஷ் நாராயணன் படத்தொகுப்புக்கும் பொறுப்பேற்றுள்ளனர்.
"விஸ்வரூபம்' படத்தில் சர்வதேச புலனாய்வு தொடர்பான பல விஷயங்கள் இடம்பெறுவதால் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் முக்கியக் காட்சிகள் அமெரிக்கா, கனடா, ஜோர்டான் ஆகிய நாடுகளில் இதுவரை யாரும் படமாக்கியிராத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. சென்னை, மும்பை ஆகிய இடங்களில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை இந்தியப் படங்களில் இடம்பெற்றிராத அமெரிக்க ராணுவக் காட்சிகள் "விஸ்வரூபம்' படத்தில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளன. இதற்காக அமெரிக்க ராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் பல தகவல்களைத் திரட்டியிருக்கிறார் கமல். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் முகாமிட்டிருந்த அமெரிக்க அணுசக்தி கப்பலான யு.எஸ்.கார்ல் வின்ஸ் கப்பலில் நடைபெற்ற விருந்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கெüரவிக்கப்பட்டார். அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றில் நடந்த விருந்துக்கு அழைக்கப்பட்ட முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார் கமல்.
உலகம் முழுவதும் வசூலில் பெரும் சாதனை படைத்த "த லார்ட் ஆஃப் த ரிங்ஸ்', "மேட்ரிக்ஸ்', "ஸ்பைடர்மேன்' போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் "விஸ்வரூபம்' படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகளை அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட அகாதெமி விழாவில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து படத்தின் வியாபாரம் ரூ.120 கோடிக்கு அதிகமாக இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.
எதிர்பார்க்கும் தொகைக்கு விற்பனையாகாவிட்டால் கமல்ஹாசனே உலகம் முழுவதும் படத்தை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. தமிழ்ப் படங்களை இந்திய எல்லையைத் தாண்டி சர்வதேச எல்லைக்குள் முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் முக்கியமானவரான கமல்ஹாசனின் "விஸ்வரூபம்' உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடைய மெகா எதிர்பார்ப்பை எற்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment